வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
நான் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த எண்பதுகளின் காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்கிறேன். மலைகளின் அரசியான உதகமண்டலத்திற்கும் குன்னூருக்கும் இடையில் இருந்த எழில் கொஞ்சும் ஏரியுடன் கூடிய மலை கிராமம்.
மனிதர்களால் பக்குவமாக்கப்பட்ட பச்சை ஆடையுடன் இயற்கையாக அமையப்பெற்ற காடுகளை உடைய கிராமம் அது. இன்றைக்கும் அதிக போக்குவரத்து வசதியில்லாத அமைதியான, வசிப்போருக்கான அறிமுகங்கள் தேவையில்லாத கிராமங்களில் ஒன்று.
குளிருடன் கூடிய மார்கழி பனியில், அருகாமையில் இருப்போரின் முகம் தெரியாவண்ணம் படர்ந்திருக்கும் பனி புகைமூட்டத்தில், அதிகாலை நான்கு மணியளவில் குறிப்பிட்ட ஆலயத்தின் முன்பாக துவங்கும் மார்கழி பஜனை.

கணீர் குரலில் ஒலிக்கும் பஜனை பாடல்கள் ஊதுபத்தியின் நறுமணத்துடன் தாளக்கருவி இசைத்தபடி, இடையிடையே சங்கநாதம் முழங்க மலைகிராம தெருக்களில் பக்தர்கள்கள் செல்வர்.
அந்தந்த தெருக்களில் கூட்டம் கூடியவண்ணம் இருக்கும். நானும் இந்த கூட்டத்தில் ஒருவனாக இருக்க எண்ணி தூக்கத்துடன் போராடி வென்ற நாட்களும் உண்டு. ஆனால் என் அண்ணன் தினமும் தனது வருகையை பதிவு செய்து விடுவான். அவனுக்கு அனைத்து பஜனை பாடல்களும் அத்துப்படி.

ஊர்த்தெருக்களில் சுற்றியபின் கடைசியில் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் மூலவர்க்கு பூஜைச்செய்து கிராம மக்கள் உபயம் செய்யும் சூடான ரவை பாயாசம், சர்ககரை பொங்கல் வினியோகிக்கப்படும்.
இதில் பஜனையில் கலந்து கொண்டோருக்கு முன்னுரிமை. பலநேரங்களில் பானையில் கலந்து கொள்ளதோர் பிரசாதத்திற்கு மட்டும் வருகை தருவர்.

எனது தாயாரும் மிகப்பக்குவமாக, பக்தி சிரத்தையுடன் மார்கழி மாதத்தின் ஒருநாள் பிரசாதத்தை தயார் செய்து கொடுப்பார்.
இன்றளவும் என் மனதில் நிழலாடும் மார்கழி மாத பஜனை , என்றும் நிலைத்திருக்குமா என்ற கேள்வியுடன்!!!
அன்புடன்
சரோவை.
(வை.அசோக்)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.