துருக்கி நிலநடுக்கம்: 6 வயது சிறுமி உயிருடன் மீட்பு – இந்திய ராணுவ முகாமில் சிகிச்சை

துருக்கியில் இடிபாடுகளிடையே சிக்கி தவித்த 6 வயது சிறுமியை பத்திரமாக மீட்டனர் இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படையினர்.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது. துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் உள்ள 10 மாகாணங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கட்டிட இடிபாடுகளில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிருடன் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

image
துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள இந்தியா, நிவாரணப் பொருட்கள், மருந்துப் பொருட்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பி வைத்துள்ளது.  ஆக்ராவிலுள்ள ராணுவ மருத்துவமனையிலிருந்து 99 பேர் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ நிபுணர்கள், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள், பொது மருத்துவர்கள் உள்ளடக்கிய மருத்துவ குழுவினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, தற்காலிக மருத்துவமனை அமைத்து சிகிச்சையளித்து வருகிறார்கள்.

image
இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் துருக்கியில் இடிபாடுகளிடையே சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், காசியன்டெப் மாகாணம் நுர்டாகி நகரில் இடிபாடுகளை அகற்றிய இந்திய வீரர்கள், உயிருக்கு போராடிய நஸ்ரீன் என்ற 6 வயது சிறுமியை பத்திரமாக மீட்டனர். அந்த சிறுமி தற்போது இந்திய ராணுவ முகாமில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியை பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.