“மயிலாடுதுறை நகராட்சியில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவது இல்லை. சாக்கடை கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குறிப்பாக கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. அதனால், குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும், ஒரு பாதாளச் சாக்கடை இணைப்புக்கான அனுமதி பெற்றுக்கொண்டு, முறைகேடாக பல கிளை இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
இதனால் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்படுகிறது. மேலும், ஒரு குடிநீர் இணைப்புக்கு அனுமதி பெற்றுக்கொண்டு, பல இணைப்புகளைப் போட்டு தண்ணீரை எடுக்கின்றனர். இதனால் அனைவருக்கும் சமமாக தண்ணீர் கிடைப்பதில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக விகடன் வாசகர் ஒருவர் நம்மை தொடர்புகொண்டு, புகார் தெரிவித்தார். அதனடிப்படையில், நேரில் சென்று கள ஆய்வு செய்தோம். அதில் நகராட்சியின் முக்கிய வீதிகளில் குப்பை தொட்டிகள் அமைக்கப்படாமலும், கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பு முறையாக இல்லாமல் இருப்பதையும் உறுதிசெய்தேம். மேலும் ஆங்காங்கே சாக்கடைக் கழிவுகளும், குப்பைகளும் முறையாக அகற்றப்படாமலும் இருந்தன.
அதையடுத்து, இதை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜியின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். நம்மிடம் பேசிய அவர், “முறையாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். மயிலாடுதுறையில் வீட்டு வரி மொத்தம் ஒன்பது கோடி ரூபாய். அதில் 65 சதவிகிதம் பேர் செலுத்திவிட்டனர். வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பாக்கி 3 கோடி ரூபாய் வீட்டு வரியையும் வசூலை செய்து முடித்துவிடுவோம்.
பாதாளச் சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்புகளை கணக்கெடுத்து வருகிறோம். தற்போது வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. சப்-கனெக்சன் செய்திருந்தால் அதை ரெஃபரன்ஸ் முறையில் இணைப்பதற்கான நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். மக்களின் ஒத்துழைப்பை வேண்டி அவர்களுக்கு தொடர்ச்சியாக விழிப்பு உணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.