திருவனந்தபுரம்: காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தொடர்பாக பிரகாஷ் ராஜ் செய்த விமர்சனத்துக்கு இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி பதிலடி பதிவை வெளியிட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் பிரகாஷ் ராஜ், பாலிவுட் திரைப்படமான ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படத்தை கேலி செய்து விமர்சனம் செய்தார். அவர் பேசிய வீடியோவில், ‘காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் ஒரு அபத்தமான படம்.
அதை உருவாக்கியது யார் என்று நமக்கு தெரியும். சர்வதேச நடுவர் மன்றம் இந்தப் படத்தை பார்த்து அவர்களின் முகத்தில் எச்சிலை துப்பியது. ஆனாலும் அவர்கள் வெட்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, தனது சமூக வலைதள பக்கத்தில் பிரகாஷ் ராஜ் பேசிய வீடியோவை பகிர்ந்து கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற சிறிய திரைப்படம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த திரைப்படம், நகர்ப்புற நக்சல்களுக்கும், அவர்களின் உதவியாளர்களுக்கும் கடந்த ஓராண்டாக தூக்கத்தை கெடுத்துவிட்டது’ என்று குறிப்பிட்டு ஆவேச பதிவை வெளியிட்டுள்ளார்.