டெல்லி : பிப்ரவரி 14ம் தேதியை பசு அணைப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய அறிவிப்பை இந்திய விலங்குகள் நல வாரியம் கைவிட்டது. உலகம் முழுவதும் பிப்.14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் காதலர் தினத்தை ‘‘பசு அணைப்பு தினமாக” கொண்டாட வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் கடந்த புதன்கிழமை அறிவித்து இருந்தது.
இது குறித்து இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, பசு அரவணைப்பு தினமாக அனைத்து பசுப் பிரியர்களும் கொண்டாடலாம். பசுக்களை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பந்தம் பெருகும். தனிநபர் மகிழ்ச்சியும், குடும்ப மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எனவே மேற்கத்திய கலாச்சாரத்தை ஒழித்து நமது பாரம்பரியத்தை காப்போம்,’ என கூறப்பட்டது.
இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.ஏராளமான விமர்சனங்கள் , கண்டனங்களுடன் அறிவிப்பை ஏளனம் செய்யும் கருத்துகளும் பதிவிடப்பட்டன. இந்த நிலையில் அறிவிப்பை கைவிடுவதாக இந்திய விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கால்நடைத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை அடுத்து பசு அணைப்பு தின அறிவிப்பை திரும்பப் பெறுகிறோம்,’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.