தப்பி பிழைத்த இரட்டை இலை; ஏறுமுகத்தில் அதிமுக- ஈரோடு கிழக்கில் படுஜோர்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் மொத்தம் 77 பேர் இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கும் வேலையில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. அதன்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சின்னங்கள் ஒதுக்கீடு

அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு முரசு சின்னமும், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் ராஜாவிற்கு குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதிமுகவிற்கு கிடைத்த இரட்டை இலை சின்னம் தான்.

திராவிட கட்சிகளின் ஆதிக்கம்

ஏனெனில் தமிழ்நாட்டு அரசியலில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. அதுவும் இரண்டே இரண்டு கட்சிகள் தான். ஒன்று திமுக, மற்றொன்று அதிமுக. இவற்றின் சின்னங்களான உதயசூரியனும், இரட்டை இலையும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதை அறியாத நபர்களே இருக்க முடியாது எனச் சொல்லலாம்.

அதிமுக உட்கட்சி பூசல்

அப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலைக்கு சென்று மீண்டும் வந்திருக்கிறது. அதற்கு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலை முக்கிய காரணமாக சொல்லலாம். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரும் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் இருந்து வெளிப்படையாக மோதிக் கொண்டு வருகின்றனர்.

வழக்கு விசாரணை

இதுதொடர்பான நீதிமன்ற வழக்குகள், விசாரணை என களம் பரபரப்பாக சென்ற நிலையில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அதிமுகவின் அரசியல் அப்படியே சைலண்ட் மோடிற்கு சென்றது. இந்த சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி அரசியல் சூட்டை கிளப்பியது.

பாஜகவிடம் ஆதரவு

உடனே அதிமுகவில் இருதரப்பும் வரிந்து கட்டிக் கொண்டு வண்டி ஏறினர். பாஜகவிடம் தனித்தனியே சென்று ஆதரவு கேட்டனர். ஆனால் பாஜக மவுனம் காத்தது. இதனால் இரட்டை இலைக்கு மோதல் ஏற்பட்டு தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கப்படும் என பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.

இரட்டை இலை ஒதுக்கீடு

ஆனால் செம ட்விஸ்டாக சின்னம் முடக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் கூற, சமாதானமாக செல்லுங்கள் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்த இதுவரை காணாத அரசியலை தமிழ்நாடு பார்க்க நேர்ந்தது. பின்னர் ஓபிஎஸ் பின் வாங்கிக் கொள்ள எடப்பாடி தரப்பின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அதிகாரப்பூர்வ அதிமுக வேட்பாளராக மாறினார். அவருக்கு இன்றைய தினம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.