ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு பரிசீலனை நேற்று நிறைவடைந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 75 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆளும் கட்சியான திமுக அதன் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
அதேபோன்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார்.
இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது இரவு நேரங்களில் டோக்கன் மூலம் பணம் விநியோகம் செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து திருப்பூர் மாவட்ட திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் சார்புதீன் காரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது காரில் இருந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் வேட்பாளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் வழங்குவதற்கான டோக்கன்களை கட்டு கட்டாக பறிமுதல் செய்துள்ளார்கள்.
பரிசு டோக்கன் விநியோகம் செய்யும் பொழுது ஈரோடு திமுக நிர்வாகி டி.சி.கிருஷ்ணனுன்னியும் உடன் இருந்துள்ளார். திமுக நிர்வாகி காரில் இருந்து பரிசு டோக்கன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.