புதுடெல்லி: குஜராத், திரிபுரா உட்பட 4 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 தலைமை நீதிபதிகள் அடுத்த ஓரிரு நாளில் ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது. குஜராத், இமாச்சல், திரிபுரா மற்றும் கவுகாத்தி ஆகிய 4 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளின் பெயர்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது. இதை ஏற்றுக் கொண்டு 4 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நேற்று நியமிக்கப்பட்டனர். இதன்படி, குஜராத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சோனியா கிரிதர் கோகனி, அதன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள்ளார்.
நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில், இவர் ஒருவர் மட்டுமே பெண் தலைமை நீதிபதி ஆவார். ஆனாலும், வரும் 25ம் தேதி தனது 62வது வயதை பூர்த்தி செய்வதால் கோகனி ஓய்வு பெறுகிறார். இதே போல், திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஒரிசா உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஐஸ்வந்த் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் வரும் 22ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி சந்தீப் மேத்தா, கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி கோடீஸ்வர் சிங் ஜம்மு காஷ்மர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ராஜேஷ் பிண்டால் மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அரவிந்த் குமார் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இரு புதிய நீதிபதிகளும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இன்று பதவியேற்க உள்ளனர். இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக முழு பலத்தை எட்ட உள்ளது.