சிதம்பரம் நடராஜர் கோயில்: “நந்தனார் சென்ற வாசலை திறக்க வேண்டும்!" – அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் திருக்கோயில் சைவத் தலங்களில் முக்கியமானது. சுமார் 3,000 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படும் இந்தக் கோயில், தற்போது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சென்று வழிபட்ட தெற்கு கோபுர வாசல் அதன்பிறகு அடைக்கப்பட்டது வரலாறு. ”நந்தனார் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் சென்று வழிபட்ட அந்த வாசலை தீட்சிதர்கள் அடைத்துவிட்டனர். தீண்டாமையின் அடையாளமாக இருக்கும் அந்த வாசலை திறக்க வேண்டும்” என்று பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் அரசை வலியுறுத்தி  வருகின்றன. இந்த நிலையில், நந்தனார் வாசல் விவகாரத்தை கையில் எடுத்தியிருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்.

நந்தனார்

நந்தனார் வழிபடச் சென்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு வாசலை திறப்பதற்கு ஆய்வு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோருக்கு  கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதையடுத்து மனுவின் நகலை கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி.ஜோதியிடம் கொடுத்திருக்கிறார். அந்த மனுவில், “63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளை போவார் நாயனார் என்கிற நந்தனார் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்து ஆதனூரில் பிறந்தவர். புலையர் குலத்தில் பிறந்த நந்தனார், சிவபெருமான் மீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்தார்.

தொழிலின் மூலம் தனக்கு கிடைக்கும் தோல் மற்றும் நரம்புகளை ஆலயத்தில் வாசிக்கப்படும் இசைக்கருவிகள் செய்ய வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். எப்போதும் சிவ நாமத்தையே உச்சரித்துக் கொண்டு இருந்தவர். ஒருநாள் ஆதனூரை அடுத்த திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றார். ஆனால் அந்தக் காலத்தில் நிலவிய தீண்டாமை கொடுமைகளால் அவரால் கோயிலுக்குள் சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. வெளியில் நின்றபடியே வணங்கி விடலாம் என்றால் அவருக்கு நந்தி மறைத்து நிற்கிறது. சிவபெருமானை தரிசிக்க முடியாத சூழலில் மிகுந்த ஏக்கத்துடன் அழுது புலம்புகிறார் நந்தனார். அப்போது தன்மீது உண்மையான பக்தி கொண்டிருந்த நந்தனார் தன்னை தரிசிக்க வேண்டி, குறுக்கே நின்ற நந்தியெம் பெருமாளை ’சற்று விலகி இரும் பிள்ளாய்’ என்று சிவபெருமான் உத்தரவிடுகிறார்.

நந்தனார் வழிபட்ட தெற்கு கோபுர வாசல்

உடனே நந்தி சிறிது வலது புறமாக நகர்ந்து கொள்ள, கருவறையில் வீற்றிருந்த இறைவனை நந்தனார் கண்டு வழங்கியதாக வரலாறு கூறுகிறது. இன்றைக்கும் அந்த திருக்கோயிலில் நந்தி சற்று விலகியே இருப்பதை காணலாம். அதையடுத்து சைவ சமயத்தில் மேன்மையான கோயிலான உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் கோயிலில் நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டும் என்பது நந்தனாருக்கு பேராவலாக இருந்தது. ஆனால் அப்போது நிலவிய சாதி கட்டுப்பாடுகளை எண்ணி வருந்திய நந்தனார், நாளைக்குப் போவேன்… நாளைக்குப் போவேன் என்று ஒவ்வொரு நாளும் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு நடராஜரை மனதிலேயே வணங்கி வந்திருக்கிறார். அதனாலையே அவர் திருநாளைப் போவார் நாயனார் என அழைக்கப்பட்டார்.

தில்லையில் நடனம் புரியும் நடராஜரை தரிசிக்கச் சென்றவர் எல்லையிலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறார். அதையடுத்து தன்னுடைய தரிசனம் கிடைக்க செய்வதற்காக தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் தோன்றி இறைவன், நந்தனாரை அழைத்து வரச் சொல்லி ஆணையிடுகிறார். சிவபெருமானின் கட்டளையை ஏற்று தீட்சிதர்களும் நந்தனாரை சிறப்பாக மரியாதை செய்து அழைத்து வர, கனக சபையில் ஆடும் அம்பலத்தரசனை தரிசனம் செய்து இறைவனோடு கலந்து விடுகிறார். இறைவன் முன் அனைவரும் சமம் என்றும், இறைவன்மீது உண்மையான பக்தி கொண்டிருந்தால் இறைவனை அடையலாம் என்பதை வரலாறு ஆக்கியவர் நந்தனார்.

ஜெமினி என்.ராதா

ஆனால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவர் சென்ற வாசல் நீண்ட காலமாக நிரந்தரமாக மூடப்பட்டிருக்கிறது. அதனால் அந்த வாசலை சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் திறக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொது அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், எந்த பலனும் இல்லை. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பையடுத்து, சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி நின்று நடராஜரை வழிபட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இதற்கு தீட்சிதர்கள் தடைவிதிக்கிறார்களா என்று கண்காணிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குழு அமைத்து கண்காணிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இதுபோல் நந்தனார் சென்று வழிபட்டதாக கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு கோபுர வாயில் வழியை, உடனடியாக திறக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு குழு அமைத்து மேற்கண்ட வழியை திறக்க வேண்டும்.

சாதி,  மதம், இனம் மொழி பாராமல் மக்கள் பணியாற்றி வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.பாலசுப்பிரமணியம் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. மேலும் இதை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புதலுடன் பக்தர்களையும் பொது மக்களையும் ஒன்று திரட்டி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.