கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சேலம் மீனவர் உடல் இன்று பிரேத பரிசோதனை: தமிழக-கர்நாடகா எல்லையில் 2வது நாளாக பதற்றம்

மேட்டூர்: மேட்டூர் அருகே மாயமான மீனவர், கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழக-கர்நாடக எல்லையில் இரண்டாவது நாளாக இன்று பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மீனவரின் உடல் இன்று சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோவிந்தப்பாடி காரைக்காட்டை சேர்ந்தவர் காரவடையான் (எ) ராஜா (39). மீனவரான இவர், தனது நண்பர்களுடன் வேட்டைக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 14ம் தேதி இரவு, மேட்டூர் பாலாறு வனப்பகுதியில் ராஜா பரிசலில் வேட்டைக்கு சென்றுள்ளார். அவரது நண்பர்களான  இளையபெருமாள், ரவி உட்பட 3 பேரும் அவருடன் வேட்டைக்கு சென்றுள்ளனர். அதேநேரத்தில் வேட்டைக்கு சென்ற இடத்தில் கர்நாடக வனத்துறையினர், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் 3 பேர் தப்பித்த நிலையில், ராஜா மட்டும் கர்நாடக வனத்துறையிடம் சிக்கிக் கொண்டார் என்று முதலில் தகவல் பரவியது. இதற்கிடையில் கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் ராஜா, பலியாகி விட்டார் என்ற தகவல் சுற்றுப்புற கிராமங்கள் அனைத்திலும் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து மேட்டூர் போலீசாரும், கோபிநாதம்பட்டி சுற்றுப்புற கிராம மக்களும் பாலாறு பகுதியில் சடலத்தை தேட ஆரம்பித்தனர். 3 நாட்கள் நடந்த தேடுதலுக்கு பிறகு நேற்று காலை, ஈரோடு வனப்பகுதி சென்னம்பட்டிக்கு உட்பட்ட சொரிப்பாறை ஆற்றுப்பகுதியில் கவிழ்ந்த நிலையில் ராஜாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ராஜாவின் சடலத்தை கண்டு மனைவி பவுனா (35), மகள், 2 மகன்கள் கதறி துடித்தனர். அவரது உடலை கைப்பற்றிய ஈரோடு மாவட்டம் பருகூர் போலீசார், சடலத்தை பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தை சேர்ந்தவர், கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியான சம்பவம் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாலாறு வனப்பகுதியில் உள்ள கர்நாடக வனத்துறை சோதனைச்சாவடியில் ஏராளமான கர்நாடக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டின்போது பலியான ராஜாவின் சொந்த கிராமமான காரைக்காட்டிலும், அவரது குடும்பத்தார் தற்போது குடியிருக்கும் கோவிந்தபாடியிலும் 100க்கும் அதிகமான தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். கொளத்தூர் 4 ரோடு, கருங்கல்லூர், பாலவாடி, சத்யாநகர், கோவிந்தபாடி, காரைக்காடு பகுதிகளில் தமிழக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்பி சிவக்குமார், மேட்டூரில் முகாமிட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக கிராம மக்கள் பாலாறு பகுதிக்கு செல்வதை கண்காணிக்க சின்னகாவல் மாரியம்மன் கோயில் அருகே தமிழக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு மாவட்ட கூடுதல் எஸ்பி கென்னடி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் உள்ளனர். இப்பகுதிகளில் நேற்று இரவு போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற நபர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இறந்த ராஜாவின் உறவினர்கள், அவரது வீட்டிற்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய உத்தரவு பிறப்பித்தவாறு கோவிந்தப்பாடியில் முகாமிட்டுள்ளனர். பாலாற்றில் உள்ள கர்நாடக வனத்துறை சோதனைச்சாவடியில் பணிபுரிந்து வந்த வனத்துறையினருக்கு பதிலாக அப்பொறுப்புகளில் கர்நாடக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பாலாற்றில் உள்ள கர்நாடக வனத்துறை கட்டிடங்களுக்கும், கர்நாடக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மகாசிவராத்திரியையொட்டி தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கோவிலுக்கு ஒரு லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் சென்று வருவார்கள்.

அதற்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மேட்டூர், ஈரோட்டிற்கு வந்து செல்லும் கர்நாடக மாநில அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. மாதேஸ்வரன் மலை செல்லும் பக்தர்கள் அச்சமின்றி செல்லவும், போக்குவரத்து தடைபடாமல் இருக்கவும் தமிழகம் மற்றும் கர்நாடக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதில், தமிழகத்தில் இருந்து செல்லும் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் வழக்கம் போல் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு சென்று வருகிறது. இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் இன்று, மீனவர் ராஜாவின் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்படுகிறது. ராஜாவின் குடும்பத்தினரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து, அதற்கான மேல் நடவடிக்கையை எடுக்க சேலம் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். பிரேதப்பரிசோதனை முடிந்தால் தான், அவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும். அதனால், இன்று மாலைக்குள் பிரேதப்பரிசோதனை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.