வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் அக்சர் படேல் அரைசதம் விளாச இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன் எடுத்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்திய வென்றது. இரண்டாவது டெஸ்ட் டில்லியில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 21/0 ரன் எடுத்திருந்தது. ரோகித் (13), ராகுல் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு, ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் தொல்லை தந்தார். இவரது ‘சுழலில்’ லோகேஷ் ராகுல் (17), கேப்டன் ரோகித் சர்மா (32), புஜாரா (0), ஸ்ரேயாஸ் (4), ஸ்ரீகர் பரத் (6) சிக்கினர். ரவிந்திர ஜடேஜா (26) நிலைக்கவில்லை. விராத் கோஹ்லி (44) ஆறுதல் தந்தார். இந்திய அணி 139 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

பின் இணைந்த அஷ்வின், அக்சர் படேல் ஜோடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக சமாளித்து விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. பொறுப்பாக ஆடிய அக்சர் அரைசதம் கடந்தார். எட்டாவது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்த போது அஷ்வின் (37) அவுட்டானார். அக்சர் (74) நம்பிக்கை தந்தார். முகமது ஷமி (2) ஏமாற்றினார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. முகமது சிராஜ் (1) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியான் 5 விக்கெட் சாய்த்தார்.
2வது இன்னிங்ஸ்
இதன் பிறகு 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி 2 வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பினறி 61 ரன்கள் எடுத்துள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement