புதுடெல்லி: சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்றும் இந்தியாவால் அதன் வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் நிதி ஆயோக்கின் முன்னாள் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி குறித்தும் சவால்கள் குறித்தும் அவர் கூறுகையில், “2023-24 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும். கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களால், இந்தியா அதன் வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளமுடியும். தற்போது சர்வதேச சூழல் நிச்சயமற்றதாக உள்ளது. இந்தச் சூழலை கவனமான பொருளாதாரக் கொள்கைகளால் எதிர்கொள்ள வேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்ய வேண்டும். உள்நாட்டு முதலீட்டையும் அந்நிய முதலீட்டையும் பெருக்கும் வழிகளை உருவாக்க வேண்டும். சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எனினும் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்து விடுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் வர்த்தகப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதைக் குறைக்க மத்திய அரசு பெய்ஜிங் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும். சில இந்தியத் தயாரிப்புகளுக்கு சீனாவில் தேவை அதிகமாக உள்ளது. அந்தத் தயாரிப்புகளின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.