மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.எம் பார்மசி கல்லூரியின் முதல்வர் விமுக்தா சர்மா (50). அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா என்பவர் அதேக் கல்லூரியில் படித்தவர் ஆவார். இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், தான் படித்து முடித்ததற்கான மதிப்பெண் சான்றிதழை வாங்குவதற்காக பலமுறை முயற்சி செய்திருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மதிப்பெண் சான்றிதழ் வாங்க வந்திருந்த அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா-வுக்கும் விமுக்தா சர்மா-வுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா, முதல்வர் கல்லூரியிலிருந்து புறப்படுவதற்காக வெளியே வந்தபோது, அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதில் அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா மீது தீ பரவி, தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அந்தப் பெண் கல்லூரி முதல்வரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

அவருக்கு 80 சதவிகித தீக்காயம் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், காவல் நிலையத்திலும் புகாரளித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மாணவரும், தற்கொலை செய்துக்கொள்ள டிஞ்சா அருவியில் குதிக்க முயன்றிருக்கிறார். ஆனால், அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, கல்லூரி முதல்வர் வாக்குமூலம் அளிக்க முடியாத நிலையில் இருப்பதால, மாணவர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தவாவை கைதுசெய்து விசாரித்து வருகிறது.