பாட்னா: பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான உபேந்திரா குஷ்வாகா விலகி, புதிய கட்சியை துவங்கி உள்ளார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதா தளம், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதில் இருந்தே உபேந்திர குஷ்வாகாவுக்கும், முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்தது.
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக உபேந்திர குஷ்வாகா அறிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது:
முதல்வர் நிதிஷ் குமாரிடமிருந்து நான் பாடம் கற்றுள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய, சில மணி நேரங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததுடன், கட்சியையும் அடகு வைத்துள்ளார். கட்சியின் வருங்கால தலைவர் என தன்னை அங்கீகரிக்கவில்லை. எனவே, ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகி, ராஷ்ட்ரீய லோக் ஜனதா தளம் என்ற கட்சியை துவங்கி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியை தொடங்கிய உபேந்திரா குஷ்வாகா, 2021ல் ஐக்கிய ஜனதா தள கட்சியுடன், தன் கட்சியை இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement