புதுச்சேரி:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மின்சாரம் தொடர்பான பல்வேறு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
மத்திய, மாநில அரசு களின் பங்களிப்புடன் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சாலை, மேம்பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் 108 பணிகளை மேற்கொள்ள திட்டமிடப் பட்டது.
இதற்காக, முதல்கட்டமாக, ரூ.196 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. மாநில அரசின் பங்களிப்பாக ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு துவக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம், வரும் ஜூன் மாதத்தில் முடிவுக்கு வருகிறது.
இதன் காரணமாக, புதுச்சேரியில் நடந்து வருகின்ற பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக, மின்சார கட்டமைப்பு தொடர்பான பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளது. மீதியுள்ள பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகிறது.
ரூ.10 கோடி செலவில் ‘காம்பாக்ட் சப் ஸ்டேஷன்’ எனப்படும் அதிநவீன டிரான்ஸ்பார்மர்களை நிறுவ முடிவு செய்யப்பட்டு, நகரப் பகுதியில் 13 அதிநவீன டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளது. 13 டிரான்ஸ்பார்மர்களை நிறுவும் பணிகள் நடந்து வருகிறது.
‘காம்பாக்ட் சப் ஸ்டேஷன்’ எனப்படும் டிரான்ஸ்பார்மர் சிறிய அறை அல்லது பெட்டி போல சாலையோரத்தில் காட்சியளிக்கும். எந்த சத்தமும் வெளியில் வராமல், அதிக திறனுடன் இயங்கும். இதில், கூடுதலான பாதுகாப்பு அம்சங்களும், தொழில்நுட்பங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து தேங்காய்த்திட்டு, வாணரப்பேட்டை, கோலாஸ் நகர், உப்பளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் உயர் மின்னழுத்த பாதையை பூமிக்கடியில் கொண்டு செல்வதற்கான பணிகள் ரூ.18 கோடி செலவில் நடந்து வருகிறது. இந்த பணிகள் 50 சதவீதம் அளவிற்கு முடிந்து விட்டது. எஞ்சியுள்ள பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகிறது.
புதுச்சேரி நகராட்சி முழுவதிலும், உழவர்கரை நகராட்சியில் சில பகுதிகளிலும் தெருக்களில் உள்ள சோடியம் வேப்பர், மெர்க்குரி வேப்பர் விளக்குகள், டியூப் லைட்டுகள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 5000க்கும் மேற்பட்ட, 25 வாட் திறனுள்ள எல்.இ.டி., விளக்குகள் ரூ.1.38 கோடி செலவில் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 55 சதவீத மின்சாரம் சேமிக்கப்படும். எல்.இ.டி., விளக்குகள் எளிதில் பழுதடையாது. ஒவ்வொரு விளக்கும் 50 ஆயிரம் மணி நேரம் (7 ஆண்டுகள்) எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாமல், சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் லால் பகதுார் சாஸ்திரி வீதி, எஸ்.வி.பட்டேல் சாலை, சுப்பையா சாலை ஆகிய சாலைகளில் ரூ.1.1 கோடியில் அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
இருளில் மூழ்கி கிடந்த புதுச்சேரி மெரினா கடற்கரை பகுதியில் ரூ.1.13 கோடியில் 45 சூரிய மின்சக்தி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த விளக்குகள் அழகாக ஒளிர்கின்றன.
இதுபோல, மின்சாரம் தொடர்பான ஸ்மார்ட் சிட்டி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. எஞ்சியுள்ள அனைத்து பணிகளையும் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்