ஜெய்ப்பூர் ராஜஸ்தானில், அரசு மருத்துவமனையில் தாயுடன் உறங்கிய 1 மாத பச்சிளங் குழந்தையை, தெரு நாய்கள் இழுத்துச் சென்று கடித்து குதறியதில் பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, சிரோஹி மாவட்ட அரசு மருத்துவமனையில் காசநோய் சிகிச்சைக்காக ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு உதவியாக, தன் 1 மாத பச்சிளங் குழந்தையுடன் அவரது மனைவியும் மருத்துவமனையில் உடனிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவரின் படுக்கைக்கு அருகே குழந்தையுடன் தாய் உறங்கினார். சிறிது நேரத்தில் அருகில் இருந்த குழந்தை, காணாமல் போனதை பார்த்து தாய் அதிர்ச்சி அடைந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார், மருத்துவமனை வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அங்கு சுற்றித்திரிந்த இரண்டு தெரு நாய்கள், குழந்தையை வெளியே இழுத்துச் சென்றது தெரியவந்தது.
இதற்கிடையே அந்த நாய்கள் கடித்து குதறியதில், இறந்த நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டதை பார்த்து, தாய் கதறி அழுதார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement