`அமைதியான எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்கள்' பன்னாட்டுக் கட்டுரைப் போட்டி 2023; $740 டாலர் பரிசு

ஜப்பானை இருப்பிடமாகக் கொண்டு செயல்படும் கோய் அமைதி அறக்கட்டளை (The Goi Peace Foundation) எனும் தன்னார்வ அமைப்பு உலகம் முழுவதுமிருக்கும் இளைஞர்கள் பங்கேற்கக் கூடிய `இளைஞர்களுக்கான பன்னாட்டுக் கட்டுரைப் போட்டி – 2023′ அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.

அமைதி மற்றும் மனிதத்துவத்திற்காகத் தனது வாழ்வினைச் சமர்ப்பித்து வாழ்ந்த ஜப்பானிய ஆசிரியர், தத்துவ ஆய்வாளர், கவிஞர் மற்றும் நூலாசிரியர் என்கிற பன்முகத்தன்மை கொண்ட மசாகிஷா கோய் என்பவரின் அமைதிக் கொள்கைகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் 1999 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கோய் அமைதி அறக்கட்டளை எனும் அமைப்பு, 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) சிறப்பு ஆலோசகருக்கான நிலையினை பெற்ற ஒரு அமைப்பாகும்.

இந்த அமைப்பு உலகம் முழுவதுமுள்ள இளைஞர்களின் ஆற்றல், கற்பனை மற்றும் முன்முயற்சிகளைப் பயன்படுத்தி, உலகில் அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியினை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தக் கட்டுரைப் போட்டியினை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. சமூக வளர்ச்சிக்குத் தேவையானவைகளை இளம் உள்ளங்களில் இருந்து கற்றுக் கொள்வதற்கும், இந்த உலகத்தில் நாம் ஒவ்வொருவரும் எப்படி தகுந்த மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்பது குறித்த அவர்களது சிந்தனைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்குமான நோக்கத்துடன் இப்போட்டி அமைக்கப்பட்டுள்ளது. நிலையான வளர்ச்சிக்குக் கல்வி எனும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) உலகச் செயற்பாடுகளுக்கான திட்டத்தின் ஒரு திட்டமாக இப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.  

கட்டுரைப் போட்டி | Representational image

கருத்துரு:

இந்தக் கட்டுரைப் போட்டிக்கு “அமைதியான எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்கள்” (Youth Creating a Peaceful Future) எனும் கருத்துரு (Theme) கொடுக்கப்பட்டிருக்கிறது. அமைதியான உலகம் உங்களுக்கு எப்படி இருக்கும்? அமைதியான எதிர்காலத்தை உணர்ந்திட, ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் மற்றும் அணுகுமுறைகளைப் பயன்படுத்தி இளைஞர்கள் எப்படி ஒன்றிணைந்து செயல்பட முடியும்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையாகவும், புதிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும்  கட்டுரை அமைய வேண்டும்.

பங்கேற்புக்கான வழிமுறைகள்:

இக்கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களின் வயது 15-6-2023 அன்று 25 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். 14 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர்களுக்கான பிரிவிலும், 15 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இளைஞர்களுக்கான பிரிவிலும் பங்கேற்கலாம்.

கட்டுரை ஆங்கிலம் அல்லது பிரெஞ்ச் மொழிகளில் 700 சொற்களுக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும். ஜப்பானிய மொழியாக இருப்பின், 1600 எழுத்துக்களுக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.

கட்டுரையின் முதல் பக்கத்தில், பங்கேற்பாளர் பெயர் மற்றும் கட்டுரையின் தலைப்பு போன்றவை குறிப்பிட வேண்டும்.

கட்டுரையினை எம்.எஸ் வேர்டு கோப்பாகவோ அல்லது பிடிஎப் கோப்பாக உருவாக்கி, இணையம் வழியாக மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாகச் சமர்ப்பிக்கக் கூடாது. 

கட்டுரை முழுவதும் சொந்தமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். அக்கட்டுரை இதற்கு முன்பாக வேறு இதழ்களிலோ, இணையத்திலோ வெளியாகி இருக்கக்கூடாது. 

கட்டுரையை ஒருவரே எழுத வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட குழுவினரால் எழுதப்பட்டிருக்கக் கூடாது.

போட்டிக்கு அனுப்பப்படும் அனைத்துக் கட்டுரைகளின் பதிப்புரிமையும் போட்டி அமைப்பாளருக்குரியதாகும்.

கட்டுரைகளைச் சமர்ப்பிக்க: இப்போட்டிக்கான கட்டுரையினைத் தனியாகவோ அல்லது தாங்கள் பயிலும் கல்வி நிறுவனம் வழியாகவோ https://goipeace-essaycontest.org/ எனும் இணைய முகவரியில் பதிவு செய்து கொண்டு 15-6-2023 வரை சமர்ப்பிக்கலாம். 

பரிசுகள்:

இப்போட்டிக்கு வரப்பெற்ற கட்டுரைகளிலிருந்து, சிறுவர்கள், இளைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாகப் பரிசுக்குரிய கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். முதல் பரிசுக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு 100,000 ஜப்பானிய யென் (பிப்ரவரி’ 2023 மதிப்பீட்டில் அமெரிக்க டாலர் மதிப்பில் US$740) பரிசும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும்.

கட்டுரை | Representational image

இரண்டாவது பரிசாக மூன்று நபர்களுக்கு 50,000 ஜப்பானிய யென் (பிப்ரவரி’ 2023 மதிப்பீட்டில் அமெரிக்க டாலர் மதிப்பில் US$370) பரிசும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். மூன்றாவது பரிசாக ஐந்து நபர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் பரிசுப்பொருளும் அளிக்கப்படும். இது தவிர, சிறப்புக்குரியவர்களாக (Honorable Mention) 25 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும், பரிசுப்பொருளும் வழங்கப்படும். 

போட்டி முடிவுகள்:

இப்போட்டிக்கான முடிவுகள் அனைத்தும் 31-10-2023 அன்று இந்த அமைப்பின் www.goipeace.or.jp எனும் முகவரியிலான இணையதளத்தில் வெளியிடப்படும். முதல் மூன்று பரிசு பெறுபவர்கள் மட்டும் இணைய வழியில் நடைபெறும் வெற்றியாளர்கள் நிகழ்விற்கு அழைக்கப்பட்டுச் சிறப்பிக்கப்படுவர். மற்றவர்களுக்கான பரிசும் பாராட்டுச் சான்றிதழும் அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கப்படும். 

கூடுதல் தகவல்கள்:

இப்போட்டிகள் குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் https://www.goipeace.or.jp/en/work/essay-contest/ எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.             

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.