டெல்லி: இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜக எதிர்ப்பு சக்திகளை முதல்வர் ஒருங்கிணைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அகில இந்திய பார்வையுடன் அரசியல் காய்களை நகர்த்தியுள்ளார்.
பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகள் யாவும் ஓரணியில் திரள வேண்டுமென ஓங்கி ஒலித்திருக்கிறார். நாட்டைக் காக்கும் நோக்கில் அவர் முன்னெடுக்கும் முயற்சி வெற்றிபெற பாஜக எதிர்ப்பு சக்திகளை ஓரணியில் திரட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அகில இந்திய அளவில் பாஜக எதிர்ப்பு சக்திகள் அதிகமாக இருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைப்பதில் தேக்கம் இருக்கிறது.
அந்த தேக்கத்தை உடைக்கும் பிரகடனமாக முதல்வரின் பிறந்தநாள் பொதுக்கூட்ட உரை இருந்தது. முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட உரை எங்களின் குரலுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கே.சி.ஆர்., மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும் என திருமாவளவன் கூறினார்.