நடந்து முடிந்த மூன்று மாநில சட்டமன்றத் தேர்தலில், திரிபுராவில் தனித்து களமிறங்கிய, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி, நோட்டாவை =விடவும் குறைவான வாக்கு சதவிகித்தை பெற்று படுதோல்வியைச் சந்தித்தது. அதாவது, தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் திரிபுரா மாநில தேர்தல் முடிவுகளில், திரிணாமுல் காங்கிரஸ் 0.88 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறது. ஆனால், நோட்டாவில் 1.36 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பரில் மேற்கு வங்க மாநில அமைச்சர் சுப்ரதா சாஹா இறந்ததையடுத்து, சாகர்திக்கி சட்டமன்றத் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், கம்யூனிஸ்ட் ஆதரவுடன் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் பேரோன் பிஸ்வாஸ் 87,667 வாக்குகள் பெற்று, 64,681 வாக்குகள் பெற்ற ஆளுங்கட்சி வேட்பாளர் தேபாசிஷ் பானர்ஜியை தோற்கடித்தார். இப்படி திரிபுராவில் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும்கூட காங்கிரஸிடம் தோல்வியுற்றது திரிணாமுல் காங்கிரஸ்.
இந்த நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி, 2024-ல் வருகின்ற மக்களவைத் தேர்தலில் தனித்து களமிறங்கப் போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “சாகர்திக்கி தோல்விக்கு, யாரையும் குறைகூற விரும்பவில்லை. சில நேரங்களில், ஜனநாயகத்தில், முன்னேற்றம் என்பது சாதகமாகவோ, பாதகமாகவோ அமையலாம். ஆனால் இங்கு முறைகேடான கூட்டணி இருக்கிறது. அதை வன்மையாகக் கண்டிக்கிறோம் நாங்கள். பா.ஜ.க தங்களுடைய வாக்குகளை காங்கிரஸுக்கு மாற்றிவிட்டது.

காவி கூடாரத்தின் உதவியை நாடிய காங்கிரஸ், இனி தன்னை பா.ஜ.க விரோதி என்று அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். 2024-ல் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து களமிறங்கும். மக்கள் ஆதரவுடன் களத்தில் நாங்கள் போராடுவோம். பா.ஜ.க-வை தோற்கடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், நிச்சயம் திரிணாமுல் காங்கிரஸுக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.