கோவை: இந்த தேர்தல் அதிசயமான தேர்தல் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் நன்றி. மேலும், திரிபுரா, நாகலாந்து தேர்தலில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் விதிமீறல்கள் நடந்துள்ளது. இது தொடர்பாக புகார் அளித்தும் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கவில்லை. இதனை அதிசயமான தேர்தலாக பார்க்கிறோம். தேர்தல் ஆணையம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. இது போன்ற தேர்தல் பேராபத்தானது. எல்லா தேர்தலிலும் எல்லா கட்சியும் வெற்றி பெற்றதாக வரலாறு கிடையாது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
