புதுடில்லி :மனு விசாரணை தொடர்பாக கடும் வாக்குவாதம் நடந்த நிலையில், கோபம் அடைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட், ‘குரல் எழுப்பாதீர்கள்; வெளியே போங்கள்’ என, மூத்த வழக்கறிஞரிடம் கடுமையுடன் குறிப்பிட்டார்.
வாக்குவாதம்
தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு நேற்று பல வழக்குகளை விசாரித்தது.
அப்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரான, மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், உச்ச நீதிமன்றத்துக்கு அரசு அளித்துள்ள நிலத்தில், வழக்கறிஞர்களுக்கு அறைகள் கட்டுவது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், ஆறு மாதங்களாக முயற்சித்தும் அது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படாதது குறித்தும் குறிப்பிட்டார்.
அப்போது, தலைமை நீதிபதிக்கும், வழக்கறிஞர் விகாஸ் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், ”இந்த மனுவை நீங்கள் விசாரிக்காவிட்டால், அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம். உங்களுடைய வீட்டுக்கு வந்து முறையிடுவோம்,” என, விகாஸ் சிங் குறிப்பிட்டார்.
அப்போது கோபமடைந்த தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:
தலைமை நீதிபதியை மிரட்டி பார்க்கிறீர்களா? இது சரியான அணுகுமுறையல்ல. நான், ௨௦௦௦ல் இருந்து இங்கு இருக்கிறேன்.
மன்னிப்பு
நான் எப்போதும், யாருக்கும் அடிபணிய மாட்டேன். என்னுடைய அடுத்த இரண்டு ஆண்டு பணிக்காலத்திலும் அப்படியே இருப்பேன்.
வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக உள்ள நீங்கள் முறையாக நடக்க வேண்டும். வழக்கை எப்போது விசாரிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். தினமும், நிறைய வழக்குகளை விசாரிக்கிறோம். நாங்கள் என்ன வேலை செய்யாமல் உட்கார்ந்திருக்கிறோமா?நீங்கள் உங்கள் குரலை எழுப்பாதீர்கள். இந்த நீதிமன்ற அறையில் இருந்து வெளியே போங்கள்.
இவ்வாறு தலைமை நீதிபதி கோபத்துடன் கூறினார்.
இந்த சம்பவம் நடந்த பிறகு, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், என்.கே.கவுல் உள்ளிட்டோர், சங்கத்தின் சார்பில் மன்னிப்பு கேட்பதாக தலைமை நீதிபதியிடம் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்