ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பஜார் பகுதியில் காய்கறி, மளிகை கடைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனால் ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள தாராட்சி, பேரண்டூர், போந்தவாக்கம், அனந்தேரி என 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாள்தோறும் பைக் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஜாருக்கு சென்று, வீட்டு உபயோக பொருட்களை வாங்கி வருவது வழக்கம். மேலும், பஜார் பகுதியிலேயே பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து ஆந்திரா, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் சென்று வருகின்றன. இதனால் ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் எந்நேரமும் வாகன நெரிசலும், மக்கள் நடமாட்டமும் இருந்து வருகிறது.
அங்கு கடைகளை ஒட்டி சாலையிலேயே ஏராளமான பைக், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அங்கு எந்நேரமும் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதற்கிடையே, கடந்த மாதம் 28ம் தேதி ஊத்துக்கோட்டை டிஎஸ்பியாக கணேஷ்குமார் பொறுப்பேற்ற பிறகு, பஜார் பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன் டிஎஸ்பி தலைமையில் போக்குவரத்து எஸ்ஐ கங்காதரன், ஏட்டு திருக்குமரன் முன்னிலையில் ஆட்டோ டிரைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ‘பஜார் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த கூடாது. டிரைவர்கள் அனைவரும் சீருடை அணிய வேண்டும்.
ஆட்டோவில் உரிமம், பர்மிட், இன்சூரன்ஸ் போன்றவை சரியாக இருக்க வேண்டும், ஆட்டோவில் அதிகளவு பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது’ என டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், நேற்று ஊத்துக்கோட்டை பஜார் மற்றும் திருவள்ளூர் சாலை பகுதியில் அதிக ஒலி எழுப்பிய பஸ் மற்றும் தடை செய்யப்பட்ட பகுதியில் நின்றிருந்த 4 கார், 3 ஆட்டோ, ஒரு பைக் உள்பட போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு வாகனங்களுக்கு 10 நிமிடத்தில் ₹16 ஆயிரம் அபராதத்தை போலீசார் விதித்தனர். மேலும், அங்குள்ள பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்களை நிறுத்த கூடாது. தடையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.