“ஊழல் மூலம் கிடைக்கும் மானியம் வேண்டாம்" – கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள்!

மயிலாடுதுறையில் உள்ள தனியார் மண்டபத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், 2023 – 24 ஆம் ஆண்டுக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான, விவசாயிகளுடன் கருத்துக் கேட்டு கூட்டம் நடைபெற்றது.

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயளர் சமயமூர்த்தி, வேளாண்மை உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை உள்ளிட்ட வேளாண் துறையைச் சேர்ந்த பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

இதில் மயிலாடுதுறை நாகை, திருவாரூர் தஞ்சாவூர், கடலூர், அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களையும், விவசாயிகளுக்கு தேவையான தொழில்துறை வசதிகளையும் தங்கள் குறைகளையும் தெரிவித்தனர்.

விவசாயிக்கு பேச வாய்ப்பளிக்காமல் வேளாண்மை துறை அமைச்சர் ஒருமையில் பேசியதாக கூறி கூட்டத்திலிருந்து விவசாயி ஒருவர் வெளியேறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஊழல் முறையில் கிடைக்கும் மானியம் தங்களுக்கு வேண்டாம் எனவும் விவசாயிகள் கருத்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கூறுகையில், “விவசாயிகள் மத்தியில் முதல்வர் மீது நல்ல மதிப்பு உள்ளது, தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதன் எதிரொலி தெரிந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் விவசாயிகளுக்கு 43 கோடியே 92 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சீசனில் மட்டும் 84 கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுடன் கருத்து கேட்டு கூட்டம்

வேளாண் பட்ஜெட் குழுந்தையாக இருந்து தற்போது நடக்கக் கூடிய அளவிற்கு வளர்ந்து, விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து அதன் பலன்கள் தற்போது விவசாயிகளுக்கு கிடைத்துக் கொண்டிருகிறது.

பயிர்காப்பீடு மூலம் ரூ.34 கோடி வழங்கப்பட்டு 19,252 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். அதே போல பருவம் தவறி பெய்த மழையினால் 14,527 விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையாக 6.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.