புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல அமைப்புகளும் நிதி திரட்டுவதுண்டு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வித்தியாசமான முறையில் அதற்காக நிதி திரட்டி இருக்கிறார்.

சூசன் லே, ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், லிபரல் கட்சியின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். இவர் நாடாளுமன்றத்திற்கு, பாடகி டினா டர்னர் (Tina Turner) போல உடையணிந்து வந்தார். அமெரிக்காவில் பிறந்த சுவிஸ் பாடகியான டினா டர்னர், நடனம், நடிப்பு எனப் பன்முக திறமை கொண்டவர். இவரைப் போல உடையணிந்து, விக் வைத்து சூசன் லே நாடாளுமன்றத்திற்குச் சென்றது அனைவரையும் கவனிக்க வைத்தது.
சூசன் லே நாடாளுமன்றத்தில் பேசுகையில், “இது ஒரு பந்தயத்திற்காகச் செய்யப்பட்டது. இந்தப் பந்தயம் மதிப்பு மிக்க காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று. கடந்த வெள்ளியன்று புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டும் கூட்டம் கிரிஃப்பித்தில் நடைபெற்றது. என் நண்பரான ரேடியோ தொகுப்பாளர், அந்த நோக்கத்துக்காக 100,000 டாலர் திரட்ட என்னிடம் இந்த டினா டர்னர் காஸ்ட்யூமை சேலன்ஞ் செய்தார். டினாவை நான் நாடாளுமன்றத்திற்கு `அழைத்துச்’ சென்றால், நண்பர்கள் அனைவரும் குறிப்பிட்ட தொகையைத் திரட்ட வேண்டும்
இரண்டு வருடங்களுக்கு முன்பு கிரிஃப்பித்தில் புதிய கேன்சர் சென்டரை நிறுவ 5 மில்லியன் டாலரை அறிவித்து இருந்தேன். கட்டட வேலைப்பாடுகளுக்கே அந்தப் பணம் போதுமானதாக இருந்தது; நோயாளிகளுக்கான பராமரிப்பு, மருத்துவச் செலவுகள் மற்றும் உபகரணங்கள் என மேலும் பணத்தேவை இருந்தது.

இப்போது புற்றுநோயாளிகளுக்கான நிதியானது 200,000 டாலராகச் சேர்ந்துள்ளது. நாங்கள் இதைச் செய்து முடித்திருக்கிறோம். நாடாளுமன்றத்தில் நான் இப்படி வர அனுமதி அளித்த நாடாளுமன்ற சபாநாயகருக்கும், மற்றவர்களுக்கும் சிறப்பு நன்றி’’ எனத் தெரிவித்தார்.
புற்றுநோயாளிகளுக்கு உதவ பந்தயத்தை ஏற்றுக்கொண்ட சூசன் லேவிற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.