சிங்கம்புணரி: சிங்கம்புணரி வாரச்சந்தையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே வாரச்சந்தை உள்ளது. இந்த வாரச்சந்தை கட்டிடங்கள் கடந்த ஆண்டு ரூ.3 கோடி மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்ட கடைகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வியாழன்தோறும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் வாரச்சந்தையின் உட்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் கடைகளின் முன்பு இருந்த மரப்பலகைகள், மேஜைகள் மற்றும் மேற்கூரைகள் ஆகியவற்றில் தீ மளமளவென பரவியது. உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி, தீயை அணைத்தனர். இதனால் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.