மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரியில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் ஆட்டு சந்தை கூடுகிறது. அதன்படி இன்று நடந்த ஆட்டு சந்தைக்கு ஓமலூர், கொளத்தூர், தாரமங்கலம், காடையாம்பட்டி பகுதிகளில் இருந்தும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பெரும்பாலை, தர்மபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் சுமார் 2500 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இவற்றில் 2,000ஆடுகள் ₹1கோடிக்கு விற்பனையானது.
கடந்த மாதத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாரியம்மன் திருவிழாக்கள் நடைபெற்றதல் ஆடுகள் விற்பனை அதிகரித்து விலையும் அதிகரித்து இருந்தது. தற்போது திருவிழாக்கள் இல்லாத காரணத்தால் ஆடு விற்பனை மந்தமாக இருந்தது. கடந்த வாரம் ரூ8,500க்கு விற்கப்பட்ட ஆடு இன்று ரூ7,000க்கு மட்டுமே விற்பனையானது. மூன்று மாத வளர்ப்பு குட்டிகள் ரூ4,000 முதல் ரூ5,000 வரை விற்கப்பட்டன.
கிடாய்கள் விலை கூடுதலாக விற்பனையானது, பெட்டை ஆடுகள் குறைந்த விலைக்கு விற்பனையானது. சுமார் 35 கிலோ எடை கொண்ட கிடாய் ஒன்று ரூ28,000க்கு விற்கப்பட்டது. போதிய விலை கிடைக்காததால் சில விவசாயிகள் தங்களின் ஆடுகளை மீண்டும் வீட்டிற்கே கொண்டு சென்றனர்.