“எங்களுக்கும் இதுபோல பல வித்தைகள் தெரியும்” – தமிழக பாஜகவுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்ததால், கட்சியிலிருந்து 6 மாத தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், இபிஎஸ் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக, ஒன்றரை கோடி தொண்டர்களை வழிநடத்துபவர் எடப்பாடி பழனிசாமி. அவருடைய உருவப்படத்தை எரிப்பது என்பது கண்டனத்திற்குரிய விஷயம்.

எனவே, அரசியல் கட்சிகளின் தலைவர்களைப் பொறுத்தவரை, அக்கட்சித் தொண்டர்கள் உணர்ச்சிவசப்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும். நாங்கள் அதிமுகவினரை கட்டுப்படுத்தவில்லை? நாங்கள் கிளர்ந்தெழுந்தால் என்ன ஆவது? இதனால் ஏற்படக்கூடிய விபரீதம் வேறு மாதிரி முடியும். எனவே, இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தோம்.

அவ்வாறு நாங்கள் சொன்னபிறகு, சம்பந்தப்பட்ட நபர்கள் பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அந்த இடைநீக்கத்தை ஏன் ரத்து செய்தீர்கள்? அப்போது நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன வெறும் கண்துடைப்பா? நான் திரும்பவும் சொல்கிறேன். கொழுந்துவிட்டு எரிகின்ற தீயில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள், அதுநல்லதல்ல.

பாஜக உடனான கூட்டணியைப் பொறுத்தவரையில் தொடர்கிறது. அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால், கட்சியில் உள்ளவர்களை கட்டுப்படுத்த வேண்டியது யார் பொறுப்பு? கட்சித் தலைமையினுடைய பொறுப்பு இல்லையா? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடக் கூடாது. இதுபோல நீங்கள் செய்தால். எங்களுக்கும் இதுபோல பல வித்தைகள் தெரியும். நாங்களும் கண்டிப்பாக எதிர்வினை ஆற்றுவோம். இடைக்காலப் பொதுச் செயலாளர் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகிகள் மீதான இடைக்கால நீக்கத்தை ரத்து செய்தால், அவர்கள் செய்த செயலை ஊக்கப்படுத்துவது போலத்தானே இருக்கிறது. எனவே, அந்த செயல் கண்டிக்கத்தக்கது” என்று அவர் கூறினார்.

முன்னதாக, பாஜகவிலிருந்து விலகியவர்கள் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதற்கு பாஜக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மார்ச் 7-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜகவின் வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி தலைமையில் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட நபரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தினேஷ் ரோடியை கட்சியிலிருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து, பாஜக மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சென்னகேசவன் உத்தரவிட்டார். இந்நிலையில், தினேஷ் ரோடியின் தற்காலிக இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.