கோவை மாவட்டத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, கணவர் தற்கொலை நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் நீலிக்கோணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துப்புரவு தொழிலாளி அனிதா (42). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அனிதாவின் கணவர் பிரிந்து சென்று விட்டதால், சிங்கநல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளியான சின்னதுரை (48) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்பொழுது இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சின்னதுரை அனிதாவின் கழுத்தை நெறித்து கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இதையடுத்து அனிதாவின் மகன் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது தாய் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன் கூச்சலிட்டுள்ளார். ஆனால் சின்னதுரை எதுவும் தெரியாதுபோல் வந்து பார்த்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிரேத பரிசோதனையில் அனிதா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் போலீசார் சின்னதுரையை பிடித்து கிடக்குப்பிடி விசாரணை நடத்தியதில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சின்னதுரையை கைது செய்தனர்.