சென்னை: திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் ஆளும் கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது என்பதுவேலியே பயிரை மேய்வதற்குச் சமம். இதிலிருந்து தமிழ்நாட்டில்சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை, மாறாக சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
இந்த அளவுக்கு வன்முறை நடைபெற்றும், காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்காமல் இருப்பதைப் பார்க்கும்போது அவரது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லையோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது.
காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர், வன்முறையில் ஈடுபட்ட அனைவர் மீதும், அதற்கு காரணமானவர்கள் மீதும்சட்டப்படி நடவடிக்கை எடுத்து,அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவேண்டும். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.