தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை முடிந்ததில் இருந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தாங்கமுடியாத வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும் எனவே 12 மணிக்கு மேல் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது என கூறப்பட்டு வந்த நிலையில், சற்று இதம் தரும் விதமாக தமிழகத்தின் பல இடங்களில் நேற்று இரவு முதல் மிதமான மழை பொழிந்து வருகிறது.

இது பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘தமிழகத்தின் வட உள் பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் மார்ச்-19 வரை பல இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழியக்கூடும்’ என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம். ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பந்தலூர் தாலுகாவில் 40 மி.மீ மழையும், வால்பாறை பகுதிகளில் 20மி.மீ மழையும் பதிவாகியுளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் கணப்படும் . சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தவெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.