கார் நுழைவு வரி சிக்கலில் ஹாரிஸ் ஜெயராஜ்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். 2001-ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் தனது திரைபயணத்தை இசையமைப்பாளராக தொடங்கினார். கடைசியாக தமிழில் தி லெஜண்ட் படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் இருந்து மசிராட்டி க்ராண்டுரிஸ்மோ என்னும் சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்த காரை தமிழகத்தில் பயன்படுத்தும் வகையில் போக்குவரத்து அலுவலகத்திற்கு பதிவு செய்யவும் விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் இறக்குமதி செய்த காருக்கு நுழைவு வரி செலுத்தவில்லை என கூறி போக்குவரத்து துறை காரை பதிவு செய்ய மறுத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு 13,07,923 ரூபாய் நுழைவு வரி செலுத்துமாறு போக்குவரத்து துறை ஹாரிஸ் ஜெயராஜ்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை எதிர்த்து ஹாரிஸ் தொடர்ந்த வழக்கில் அபராதத்துடன் நுழைவு வரி செலுத்த வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நுழைவு வரியுடன் சேர்த்து அபாராதத்தை செலுத்துமாறு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ்க்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் மனுதாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் விற்கப்பட்ட எனது காருக்கு நுழைவு வரியாக ஏற்கனவே 11.50 லட்சம் கட்டிவிட்டேன்.

ஆனால் இந்த நுழைவுவரி தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி மேலும் வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் தற்போது அபராதத்துடன் நுழைவு வரி செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இது விதிகளுக்கு முரண் ஆனது என்றும் குறிப்பிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில் ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணி ஆஜரானார். மேலும் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.