பணமோசடி வழக்கில் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தை சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய உயர் அதிகாரிகளின் வீடுகளில் நேற்று அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.

கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம் அதன் ஆறு கடன் திட்டங்களை திடீரென்று நிறுத்தியது. இதற்கு கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடி தான் காரணம் என்று கூறப்பட்டது. இது அந்த திட்டங்களில் முதலீடு செய்திருந்த வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆறு திட்டங்களிலும் சுமார் 3 லட்சம் வாடிக்கையாளார்கள் ரூ.25,000 கோடி முதலீடு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அப்போதைய ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் கிளையின் தலைவர் விவேக் குட்வா, தனது மனைவி உடன் சேர்ந்து 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இந்த திட்டத்திலிருந்து ரூ.30.70 கோடியை எடுத்துள்ளனர் என்பது செபி தனது விசாரணையில் கண்டுபிடித்தது.
அடுத்ததாக இந்த நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகள் கடன் நிதிகளை சரியாக கையாளாததால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து செபி வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் அவர்களது பணத்தை திருப்பி தரவேண்டும் என்றும், அபராதமாக ரூ.5 கோடியையும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மேலும் அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மும்பை மற்றும் சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் விவேக் குட்வா உள்ளிட்ட முன்னாள் மற்றும் தற்போதைய உயர் அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.