தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக கூறிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதனால் பதற்றம் கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த வாரம் ஒன்றிய அரசின் சுகாதாரத் துறைச் செயலாளரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகரித்து வருவதாக கூறியிருந்தனர். கடந்த எட்டு மாதங்களாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 2 என்ற அளவில் தான் இருந்தது. கொரோனா உயிரிழப்பே இல்லை என்ற நிலை தான் இருந்தது. ஆனால் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 76ஆக அதிகரித்துள்ளது.
உருமாறிய ஒமிக்ரான் வகை
கொரோனா வைரஸ்
தற்போது பரவி வருகிறது. புதிய வகை கொரோனா வைரஸால் பெரியளவில் பாதிப்புகள் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோரால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் பரிசோதனை செய்யப்படுகிறது என்றார்.
கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது; மக்கள் பதற்றப்பட தேவையில்லை. H3N2 காய்ச்சல் பாதிப்புக்கு தமிழ்நாட்டில் 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாரந்தோறும் 35 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 2 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.