மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கல்பதேவி பகுதியில் லால்சந்த் வனிகோடா என்ற வர்த்தகர் அலுவலகத்தில் போலியாக சோதனை நடத்தி, மாநில ஜிஎஸ்டி ஆய்வாளர்கள் ஹிதேஷ் வசைகர், மச்சிந்திர கங்கனே, பிரகாஷ் ஷேகர் ஆகிய மூவரும் 2021 ஜூன் 14-ம் தேதி ரூ.11 லட்சத்தை எடுத்துச் சென்றனர்.
பின்னர் இந்த சோதனை போலி என்று அறிந்த லால்சந்த் எல்.டி.மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட3 ஆய்வாளர்கள், அவர்களுடன் வந்த ஒருவரை 2021 செப்டம்பரில் கைது செய்தனர்.
இந்நிலையில் அந்த ஆய்வாளர்கள் மூவரும் நேற்று முன்தினம் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இதுகுறித்து மாநில ஜிஎஸ்டி துறை மூத்த அதிகாரி ராஜீவ் மிட்டல் கூறும்போது, “மூவருக்கும் எதிராக போலீஸ் விசாரணை தொடர்கிறது. அவர்கள் போலி ரெய்டு நடத்தியது உறுதி செய்யப்பட்டதால் நிர்வாக மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு பிறகு அவர்களை பணிநீக்கம் செய்தோம்” என்றார்.
ஜிஎஸ்டி ஆய்வாளர்கள் மூவரும் பணிநீக்கம் செய்யப் பட்டது குறித்து மகாராஷ்டிர அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது. தவறு செய்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது மாநில அரசு நிர்வாக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.