பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தல்

பிரச்சினைகளை விரைவாக தீர்த்துக்கொள்ளாவிட்டால், பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும்
இந்நாட்டு மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலை துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு காண முடியும் என தாம் நம்புவதாகவும், இல்லையேல் பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற பிரிவெனா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைத் துணிகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவத் தேரர்கள், சில் மாதர்கள் மற்றும் மற்றும் 40 மாணவர்களுக்கு ஜனாதிபதி அடையாள ரீதியாக பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கி வைத்தார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், பதில் கல்விச் செயலாளர் ஹேமந்த பிரேமதிலக மற்றும் சங்கமித்தா மகளிர் கல்லூரியின் அதிபர் துஷாரி டி சில்வா ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைத்தனர்.

2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடை துணிகளில் 70% வீதமானவை, சீன அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக கிடைத்துள்ளதுடன், அவை அனைத்தும் தற்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வர்த்தகர்களால் எஞ்சிய சீருடை துணிகள் வழங்கப்படுகின்றன. இந்தியக் கடன் உதவியின் கீழ் மூலப் பொருட்களைப் பெற்று அரச அச்சகக் கூட்டுத்தாபனம் மற்றும் உள்நாட்டு விநியோகஸ்தர்களால் அச்சிடப்பட்ட பாடசாலைப் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவை உத்தியோகபூர்வமாக இதன் போது விநியோகிக்கப்பட்டன.

அரச பாடசாலைகள் மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும், பிரிவெனாக்களில் படிக்கும் தேரர்களுக்கும் இந்த சீருடை துணிகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த், பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட, கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார், உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக்க, பாராளுமன்ற உறுப்பினர் யதாமணீ குணவர்தன, மேல்மாகாண செயலாளர் பிரதீப் யசரத்ன, கல்வி அமைச்சின் பதில் செயலாளர் ஹேமந்த பிரேமதிலக்க, கல்வி வெளியீட்டு ஆணையாளர் Z. தாஜுதீன் மற்றும் கல்வி மற்றும் துறைசார் அமைச்சுகளின் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.