
சமீப காலமாக ரீல்ஸ் வீடியோ மோகத்திற்கு ஆசைபட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆபத்தான சாகசங்களை பொது வெளியில் செய்யும் சம்பவங்கள் அதிகாரித்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இளைஞர் ஒருவர் இரு பெண்களை பைக்கில் வைத்து செய்த சாகசம் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு இளைஞர் தனது பைக்கில் முன் பகுதியில் ஒரு பெண்ணையும் பின் பகுதியில் ஒரு பெண்ணையும் வைத்து நடுவே இவர் அமர்ந்து வேகமாக வண்டி ஓட்டுகிறார். மூன்று பேருமே ஹெல்மெட் அணியாத நிலையில், முன்பகுதியில் உள்ள பெண்ணின் வண்டி ஓட்டும் இளைஞரை பார்க்கும் விதமாக திரும்பி அமர்ந்துள்ளார். அந்த இளைஞரோ தனது பைக்கில் வேகமாக ட்ரிப்பிள்ஸ் போனது மட்டுமல்லாது, முன்பக்கத்து சக்கரத்தை உயரத் தூக்கி அபாயமான முறையில் வீலிங் செய்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த மும்பை போக்குவரத்து போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் போலீசார் மூவர் மீதும் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவுகள் 279 (அடிப்படையில் வாகனம் ஓட்டுதல்) மற்றும் 336 (உயிர்களுக்கு ஆபத்து) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் ட்விட்டரில், “பிகேசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வீடியோவில் உள்ள நபர்கள் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் தகவல் தெரிவிக்கவும்” என கூறியுள்ளனர்.