தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்படி? மூன்று வாரங்களில் கிடுகிடு ஏறுமுகம்!

கொரோனா வைரஸ்
என்றாலே ஒருவித கலக்கம் மனதிற்குள் இருக்கத்தான் செய்கிறது. மூன்று அலைகள், பல லட்சம் உயிர்கள், தீராத மன உளைச்சல், பெரும் பொருளாதார இழப்பு என சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாம் முடிந்தது. இனி கொரோனா வராது என நம்பிக்கை நிலவிய சூழலில் 2023ஆம் ஆண்டு சற்றே பதற்றத்தை கூட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு

தற்போது ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக ஏறுமுகத்தை நோக்கி சென்றுள்ளது. கடந்த மார்ச் இரண்டாவது வாரத்துடன் ஒப்பிடுகையில் வாராந்திர பாசிடிவ் விகிதம் மூன்றாவது வாரத்தில் 1.4 சதவீதத்தில் இருந்து 3.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

அதிலும் மார்ச் மாதத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் தினசரி பாசிடிவ் விகிதம் 8ஆம் தேதி 0.9 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு நிலையாக அதிகரித்து மார்ச் 31ஆம் தேதி 3.6 சதவீதமாக மாறியுள்ளது. இவர்களில் பலருக்கு அறிகுறிகளே இல்லை அல்லது லேசானது ப்ளூ காய்ச்சல் அறிகுறிகள் தென்படுகின்றன.

தமிழக நிலவரம்

நேற்று தினசரி கொரோனா பாசிடிவ் விகிதம் 3.8 சதவீதமாக காணப்பட்டது. தமிழகத்தில் நேற்று புதிதாக 156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் விமானம் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மலேசியாவில் இருந்து வந்தவர்கள். சென்னையில் மட்டும் புதிதாக 43 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மொத்த நோயாளிகள்

செங்கல்பட்டு, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா 14 பேருக்கும், திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரியில் தலா 8 பேருக்கும் வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது. இதன்மூலம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 836ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை வெறும் 19 பேர் என்பது கவனிக்கத்தக்கது.

சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்

நேற்றைய தினம் 3,766 மாதிரிகள் RT-PCR பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக பேசிய பொது சுகாதாரத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வ விநாயகம், ஒரே இடத்தில் அதிகப்படியான பாதிப்புகள் எதுவும் தென்படவில்லை. மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

தீவிர பாதிப்புகள் இல்லை

ஆக்சிஜன் உதவியுடன் அல்லது அவசர சிகிச்சை மையங்களில் நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் பலருக்கு எதேச்சையாக தான் கோவிட்-19 பாசிடிவ் கண்டறியப்படுகிறது. தற்போதைய நோய்த்தொற்று பரவலுக்கு XBB ஒமிக்ரானின் உருமாறிய வைரஸே காரணம்.

அதிலும் XBB.1.16 என்ற மாதிரி தான் புதிய பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படுவதில் முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே வயதானவர்கள், இணை நோய்கள் இருப்பவர்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம். மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பொது இடங்களிலும் உரிய கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.