நெல்லை: பல்வீர் சிங் பொறுப்பில் இருந்த போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. சட்டம் ஒழங்கை சரியாக பராமரித்தார் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் சட்டத்தை கையில் எடுத்ததுதான் தவறு என்று அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றியவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்.
அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள காவல் நிலைய எல்லை பகுதிகளில் சிறிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை, காவல் அதிகாரி பல்வீர் சிங் கொடூரமாக சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பற்களை பிடுங்கியதாக
அதாவது, காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் நபர்களின் பற்களை கொடூரமாக பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக உதவி கலெக்டர் முகம்மது சபீர் விசாரணை நடத்தி வருகிறார்.

அம்பை எம்எல்ஏ இசக்கி சுப்பையா
பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையில் போலீசார் உள்பட 13 பேர் இதுவரை ஆஜராகி தங்களுடைய விளக்கங்களை அளித்துள்ளனர். இதனிடையே, அம்பை ஏ.எஸ்.பி பல்வீர் சிங் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அம்பை எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, பல்வீர் சிங் பொறுப்பில் இருந்த போது சட்டம் ஒழுங்கு சரியாக இருந்ததாக தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கை சரியாக பராமரித்தார்
ஏ.எ.எஸ்.பியின் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் நபர்களை இசக்கி சுப்பையா இன்று சந்தித்தார். அதன்பிறகு எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பல்வீர் சிங் பொறுப்பில் இருந்த போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ஆனால் அவர் சட்டத்தை கையில் எடுத்ததுதான் தவறு. சட்டம் ஒழங்கை சரியாக பராமரித்தார் அதில் மாற்றுக் கருத்து இல்லை.

சட்டத்தை கையில் எடுத்ததுதான்
அதே நேரத்தில் சட்டத்தை அவர் கையில் எடுத்ததைத்தான் தவறு என்று சொல்கிறேன். சட்டத்தை அவர் கையில் எடுத்து இருக்கக் கூடாது. பல் பிடுங்குவதற்கு எந்த சட்டத்திலும் இடம் கொடுக்கவில்லை. தங்க ஊசியை கொண்டு கண்ணில் குத்திக்க முடியுமா? அவர் செய்தது அனைத்தும் தவறு என்று நான் சொல்ல வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களும் தவறு செய்து இருப்பார்கள். அதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். நான் காந்தி, மகான் என்று சொல்லக்கூடாது. தப்பு செய்ததற்கு பிடித்து வந்தார். ஆனால், சட்டத்தை அவர் கையில் எடுத்ததுதான் தவறு என்றார்.