ஹெல்சின்கி: ஐரோப்பிய நாடான பின்லாந்து ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளது. நேட்டோவில் இணையும் 31ஆவது நாடு பின்லாந்து ஆகும்.
உக்ரைன் நாட்டில் இப்போது போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த ஓராண்டிற்கு மேலாக இந்த போர் நடந்து வருகிறது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்பதே இந்த போர் ஆரம்பிக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது.
ஏனென்றால் நேட்டோ அமைப்பில் இணைந்தால், நேட்டோ படைகள் அந்த நாட்டிற்குள் வரும். அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் நேட்டோ படைகள் உக்ரைனுக்கு வந்தால் அது தங்களுக்கு ஆபத்தைத் தரும் என்று புதின் கருதினார். இதுவே போருக்குக் காரணமாக அமைந்தது.
ஆனால், இந்த போர் மற்ற ஐரோப்பிய நாடுகளை அச்சம் கொள்ள வைத்தது. தங்கள் மீதும் ரஷ்யா போரை ஆரம்பித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் கருதினார்கள்.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் இத்தனை காலம் நேட்டோ அமைப்பில் இருந்து தள்ளியே இருந்த ஐரோப்பிய நாடான பின்லாந்து, நேட்டோவில் இணைய முடிவு செய்தது.
இதற்கு ரஷ்யா மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. விளைவுகள் மோசமாக இருக்கும் என்றெல்லாம் எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும், பின்லாந்து தனது முடிவில் உறுதியாக இருந்தது.
இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பின்லாந்து ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோவில் இணையும் 31ஆவது நாடு பின்லாந்து ஆகும்.