சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, “தமிழகத்தின் மொத்த கடன் 12 லட்சம் கோடி. இந்த 12 லட்சம் கோடியை வாங்கி இவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இவ்வளவு கடனை வாங்கி, அதற்கு வட்டி கட்டுகிறார்கள். அந்த வட்டியை கட்டுவதற்கு மீண்டும் கடன் வாங்குகிறார்கள். இப்படி தான் ஒரு தமிழக அரசு நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு மட்டுமில்லை தொடர்ச்சியாக இதே போன்ற நிலை தான் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழக அரசு தற்போது இரண்டாவது முறையாக நிறைவேற்றியுள்ள ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த மசோதா இயற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த இடைப்பட்ட காலத்தில் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். சென்ற முறை 17 என மொத்தம் 19 பேர் இந்த இடைக்காலத்தில் உயிரிழந்துள்ளார்கள். இந்த 19 பேரின் உயிரிழப்புக்கு காரணம் ஆளுநர் தான் என்று நான் கூறுவேன்.

ஆளுநருக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள், ஆளுநரை கையெடுத்து கும்பிடுகிறேன். தயவு செய்து கையெழுத்து போடுங்கள். தமிழ்நாட்டினுடைய குடும்பங்களை காப்பாற்றுங்கள். தமிழ்நாட்டு தன்னுடைய இளைஞர்களை காப்பாற்றுங்கள் ஆளுநர் அவர்களே.
உங்களுடைய வீட்டை உங்களுக்கு தெரியாமல் ஒருவர் ஏலம் விட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? கொதித்து எழுந்து விட மாட்டீர்கள்! அதே நிலை தான் இன்றும், விவசாயிகளுக்கு தெரியாமல், அங்குள்ள கிராமங்களுக்கு தெரியாமல் அவர்கள் மண்ணையும், வீட்டையும் மத்திய அரசு ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறது.

நாம் என்ன செய்ய வேண்டும்? கொதித்து எழ வேண்டும். அதுதான் நடக்கனும், நடக்க வேண்டும். ஆனால் அப்படி கொதித்து எழுவதாக ஒன்றும் தெரியவில்லை. அந்த மக்களுக்கு இன்னும் தெரியவில்லை.
மக்கள் பீதி அடைய வேண்டாம், கவலை அடைய வேண்டாம் என்று சொல்வதற்கு பதில், நாங்கள் இந்த ஆறு நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று அல்லவா முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்திருக்க வேண்டும். அதனைத்தான் அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.