ராஜஸ்தானில் கலாசாரம், பாரம்பர்யம், பழக்கவழக்கங்கள், பெண்களின் பாதுகாப்பு என்ற பெயரில் வலுக்கட்டாயமாக குழந்தைத் திருமணங்கள் நடத்திவைக்கப்படும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் அங்கு தன்னார்வலர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ராஜஸ்தானில் குழந்தை திருமணங்களின் கள நிலவரம் குறித்து IndiaSpend தளத்தில் வெளியான விரிவான கட்டுரையின் முக்கிய தகவல்களின் தொகுப்பு இது.
கல்வி, தொழில்நுட்பம் போன்றவற்றில் நாம் வளர்ச்சியடைந்தாலும், சமூகத்தில் இன்றுவரை நிலவும் பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களால் குழந்தை திருமணம் போன்ற சமூக அவலங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு உதாரணமாக ராஜஸ்தான் மாநிலத்தைக் குறிப்பிடலாம். அங்கு பாரம்பர்யம், குழந்தை பாதுகாப்பு, கவுரவம் என்ற பெயரில் குழந்தைத் திருமணங்கள் நடப்பதால் இளம் வயது கர்ப்பம், குடும்ப வன்முறை, இளம் வயதில் கைம்பெண் கொடுமைகள் உள்ளிட்டவற்றை பெண்கள் அனுபவிக்க நேரிடுகிறது.

குழந்தை திருமணம்.. அதிர்ச்சி புள்ளி விவரம்!
ராஜஸ்தானைச் சேர்ந்த ஆனாச்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனக்கு 5 வயதாக இருந்தபோது ஒருவருக்குத் திருமணம் செய்துகொடுக்கப்பட்டதை நினைவுகூர்கிறார். “எனக்கு அப்போது அவர் குறித்து எதுவுமே தெரியவில்லை. எனது 13வது வயதில், நான் தாய்மை, குழந்தை பற்றியெல்லாம் அறிந்து கொள்ளும் முன்னரே குழந்தையைப் பெற்றேன். பின்பு அனைத்தையும் அறியத் தொடங்கும் முன்னரே, 20 வயதில் விதவையாக நிற்கிறேன்” என்று சோகத்துடன் பகிர்ந்து கொண்டார்.
இப்போதெல்லாம் குழந்தை திருமணங்கள் குறைந்துவிட்டன, அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நடக்கின்றன என்று நாம் கருதுகிறோம். ஆனால், யுனிசெஃப் 2020-ம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி உலக அளவில் இந்தியாவில் தான் அதிக அளவிலான குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. வருடத்திற்கு ஒன்றரை மில்லியன் குழந்தைகள், மணப்பெண்களாக மாறுகின்றனர் என்ற அதிர்ச்சியான உண்மை வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மட்டும் 223 மில்லியன் குழந்தைகள், திருமணம் செய்யப்பட்டவர்களாக உள்ளனர். இது, உலக சராசரியுடன் ஒப்பிடும்போது மிகமிக அதிகம். குழந்தை திருமணம் என்ற இந்தப் பிரச்னை, குழந்தையின் உரிமை சார்ந்த, தன் திருமணத்தை தேர்வு செய்யும் தனிப்பட்ட உரிமையை பறிப்பது மட்டுமான பிரச்னையல்ல. சிறுவயது கர்ப்பம், விவாகரத்துகள், சிறுவயதிலேயே கைம்பெண் ஆவது, கல்வியறிவு கிடைப்பதில் சிக்கல், வேலையின்மை, உழைப்புச் சுரண்டல், கர்ப்பகால மரணம், பாலின வேறுபாடு எனப் பல பிரச்னைகளையும் கொண்டு வருவதற்கான அடிப்படையாக இருக்கிறது என்று கூறுகிறார் ராஜஸ்தானை சேர்ந்த, பாலின பிரச்னைகள் குறித்து சமூகப் பணியாற்றும் தாரா அலுவாலியா.
18 வயதுக்கு முன்பே திருமணம்!
ராஜஸ்தானில் நடைபெறும் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை பல வருடங்களாக அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது. கலாசாரம், பாரம்பர்யங்கள், பழக்கவழக்கங்கள் என வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஐந்தாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி (NFHS-V) 2019-21ம் ஆண்டில், ராஜஸ்தானில் உள்ள 20-24 வயதுடைய 24.5% பெண்களுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 2015-16ல் இந்த எண்ணிக்கை 35.4% ஆகவும், 2005-06ல் 65.2% ஆகவும் இருந்து, தற்போது குறைந்துள்ளது. ராஜஸ்தானின் சமீபத்திய குழந்தைத் திருமண சராசரி விகிதம், இந்தியாவின் சராசரியான 23.3 சதவிகிதத்தைவிட அதிகமாகவே உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜ்சமந்த் பகுதியில் இருந்து சுமார் 120 கிமீ தொலைவில், பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த குஷ்பு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஜனவரி 2023ல் தன்னுடைய 17வது வயதில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றார். இவரது திருமணம், கோவிட்-19 தொற்றுக் காலத்தில், அதாவது நவம்பர் 2020-ல் நடைபெற்றது. “எனது எட்டாம் வகுப்பு தேர்வுகளை முடித்துவிட்டு நான் பள்ளியை விட்டு வெளியே வந்தேன். லாக்டவுன் நேரத்தில் படிப்பு தடைபடுவது உறுதியானது. என் தந்தை ஓட்டுநர். ஆறு மாதங்களாக வருமானம் இல்லாததால், மூன்று வேளை உணவு உண்பதே எங்களுக்கு பெரும் சவாலாக இருந்த சூழலில்தான் எனக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்” என்று, தான் திருமணம் செய்து வைக்கப்பட்ட சூழலை நினைவுபடுத்தியவர், “என் கணவர் என்னை விட 12 வயது மூத்தவர், அவருக்கு மளிகைக்கடை உள்ளது. திருமணமான ஒரு வருடத்தில் அவருடைய முதல் மனைவி இறந்துவிட்டார். அதனால் என்னை திருமணம் செய்து வைத்தனர்” என்றார்.

இந்த சம்பவங்கள் குறித்து, உதய்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜதன் என்ற தன்னார்வ நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான கைலாஷ் பிரிஜ்வாசி கூறுகையில், “குழந்தைத் திருமணம் ராஜஸ்தானின் பழமையான பாரம்பர்யங்களில் ஒன்றாகும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் இந்த மாதிரியான விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இப்போது சிறுமிகளுக்கு 18 வயதாகும்வரை காத்திருக்கிறார்கள்” என்றார்.
தேசிய உதவி மையமான ’சைல்டுலைன்’ ஒருங்கிணைப்பாளர் மருதர் சிங் தேவ்தா கூறுகையில், “இன்றும் எங்கள் குழு குழந்தை திருமணத்தை தடுக்கச் செல்லும்போது சில சமயங்களில் வன்முறைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. பெரும்பாலும் பழங்குடியினப் பகுதியில் இது நிகழ்கிறது. ஒரு பெற்றோருக்கு மூன்று மகள்கள் இருந்தால், அவர்களில் மூத்தவருக்கு 17 அல்லது 18 வயதாகும் வரை மட்டுமே காத்திருக்கின்றனர். அடுத்து வரும் குழந்தைகளுக்கு அவர்களின் வயது என்னவாக இருந்தாலும், உடனடியாகத் திருமணம் செய்து வைத்துவிடுவர்” என்றார்.
ஏன் குழந்தை திருமணங்கள் இன்றும் தொடர்கின்றன?
குழந்தை திருமணம் தொடர்பாக இந்தாண்டு நடந்த ஆய்வின்படி, அதற்கான காரணங்களாக கல்வியின்மை மற்றும் கல்வியறிவில் உள்ள பாலின இடைவெளி, பொருளாதார சூழ்நிலை, அம்மக்கள் வசிக்கும் பகுதியில் நிலவும் சமூக மரபுகள் மற்றும் நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவை கூறப்படுகின்றன.
“குழந்தை திருமணம் என்பது ஆழமாக வேரூன்றிய சமூக – கலாசார விதிகள் மற்றும் வேரூன்றிய பாலின ஏற்றத்தாழ்வுகளின் எதிர்மறை விளைவாகும். வறுமை, நிதிப் பாதுகாப்பின்மை, கல்வி இல்லாமை மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அக்கறை போன்றவற்றால் பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க நிர்ப்பந்திக்கிறார்கள்” என்கிறார் பாலினப் பிரச்னைகள் தொடர்பாகப் பணியாற்றும் தன்னார்வ நிறுவனமான இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் (PFI) நிர்வாக இயக்குநர் பூனம் முத்ரேஜா.
உள்ளூர் மக்களிடம் விசாரிக்கும்போது, காதல் திருமணங்களும், கலப்பு திருமணங்களும் நடப்பதற்கான வாய்ப்புகளை தாங்கள் உருவாக்க விரும்புவதில்லை. தங்களின் கவுரவம் பாதிக்கப்படுவது குறித்த கவலையில்தான் இளம் வயதிலேயே திருமணத்தை நடத்துவதாகக் கூறுகின்றனர்.

மாறும் சூழல்கள்!
’சட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லியும், குழந்தை திருமணம் செய்யாமல் இருப்பதன் நன்மைகளை விளக்குவதன் மூலமும் அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி, பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்குத் தனி கழிப்பறை வசதி, கல்வித் தரத்தை மேம்படுத்துதல், பெண் கல்வியின் அவசியத்தை பெற்றோர்களுக்குப் புரியவைப்பது போன்றவற்றின் மூலம் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்படுத்தலாம்’ என்று தன்னார்வலர் முத்ரேஜா தெரிவிக்கிறார்.
தற்போது மாற்றம் பெண்களிடம் இருந்து தொடங்கி இருக்கிறது. இப்போது 37 வயதாகும் நிஷா சோலங்கிக்கு, 17 வயதாக இருந்தபோது 24 வயதான ஒருவருடன் திருமணம் நடைபெற்றிருந்தது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த அவர், திருமணத்திற்குப் பிறகும் மேற்கொண்டு படிக்க விரும்பினாலும் புகுந்த வீட்டில் அனுமதிக்கவில்லை. ஆனால், அடுத்த ஐந்து வருடங்களுக்குள், அவரது கணவர் டெங்குவால் இறந்துவிட்ட நிலையில் மாமியார் தன்னை படிக்க வைக்க ஒப்புக்கொண்டதாக, நிஷா தெரிவிக்கிறார்.
நிஷா தனது விருப்பமாக கூறுகையில், “என் மகள் பள்ளியை முடித்துவிட்டு உயர் படிப்புக்காக ஒரு நல்ல கல்லூரிக்குச் செல்வதைப் பார்க்க வேண்டும். அவள் தனது பிஎச்.டியை தொடர வேண்டும்; அவள் விரும்பும்போது மட்டுமே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னால் பெற முடியாத வாழ்க்கையை நான் அவளுக்குக் கொடுப்பேன்” என்கிறார். பெண்களிடம் தொடங்கியுள்ள இந்த மாற்றம், வரவேற்கத்தக்கது.
இது, Indiaspend இணையதளத்தில் வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் ஆக்கம்.
https://www.indiaspend.com/gendercheck/married-at-5-mother-at-13-and-widowed-by-20-the-struggle-of-child-brides-in-rajasthan-856036

Jigyasa Mishra / Indiaspend.org
(Indiaspend.org is a data-driven, public-interest journalism non-profit / FactChecker.in is fact-checking initiative, scrutinising for veracity and context statements made by individuals and organisations in public life.)