வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் 70 வயது மூதாட்டி சமயோசிதமாக செயல்பட்டதால், பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள் அந்த மூதாட்டிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவின் மந்தாரா பகுதியில் வசிப்பவர் சந்திரவதி(70). சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். அம்மாநிலத்தின் படீல் மற்றும் ஜோகாடே பகுதிகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில்பாதை செல்லும் வழியில் அவரது வீடு அமைந்துள்ளது. கடந்த 21ம் தேதி பிற்பகல் 2:10 மணியளவில் வீட்டை விட்டு வந்த போது, ரயில் தண்டவாளத்தின் மீது மரம் விழுந்து கிடந்துள்ளதை சந்திரவதி பார்த்துள்ளார்.

அப்போது, அந்த பாதையில், மங்களூரு – மும்பை இடையில் இயக்கப்படும் மத்ஸ்யகந்தா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. உடனடியாக சந்திரவதி சமயோசிதமாக யோசித்து, வீட்டில் இருந்த சிவப்புத்துணியை எடுத்து கொண்டு, ரயிலை நோக்கி ஓடினார்.

இதனை கவனித்த ரயில் டிரைவரும் ஆபத்தை உணர்ந்து, ரயிலின் வேகத்தை குறைத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டார். ரயில் மரம் விழுந்து கிடந்த பகுதி அருகே வந்து நின்றது. உடனடியாக ரயில்வே ஊழியர்களும், உள்ளூர் மக்களும் இணைந்து மரத்தை அகற்றிய பிறகு ரயில் கிளம்பி சென்றது. சந்திரவதியை பாராட்டும் வகையில், பாராட்டு விழா நடந்தது. அதில், பங்கேற்ற ரயில்வே உயர் அதிகாரிகள் சந்திரவதியை பாராட்டி கவுரவித்தனர்.
Advertisement