வயநாடு: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் கேரளா மாநிலம் வயநாடு தொகுதி எம்பி பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கத்துக்கு பிறகு அங்கு முதல் முறையாக சென்ற ராகுல் காந்தி சாதாரண லாரியில் வலம் வந்த நிலையில் அவரை பார்க்க ஏராளமான மக்கள் குவிந்திருக்கும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி கவனத்தை ஈர்த்துள்ளது.
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்த நிலையில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில் லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோர் பற்றி ராகுல் காந்தி பேசினார்.
அப்போது அனைத்து திருடர்களின் பெயர்களும் ஏன் மோடி என முடிகிறது? என கேள்வி எழுப்பினார். இது சர்ச்சையானது. ராகுல் காந்தி, மோடி என பெயர் வைத்துள்ள சமுதாயத்தினரை இழிவுப்படுத்திவிட்டார். மேலும் பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் இப்படி பேசியதாக குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
ராகுல் தகுதிநீக்கம்: மேலும் குஜராத் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த மாதம் 23ம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதாவது ராகுல் காந்தியிடம் இருந்து வயநாடு தொகுதி எம்பி பதவி பறிக்கப்பட்டது.
வயநாட்டில் ராகுல்: தற்போது இந்த வழக்கில் ஜாமீனில் உள்ள ராகுல் காந்தி சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இதற்கிடையே ராகுல் காந்தி தகுதி நீக்கத்துக்கு பிறகு நேற்று முதல் முறையாக கேரளா மாநிலம் வயநாடு சென்றார். தனது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி உள்பட பல காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ராகுல் காந்தி பேச்சு: மேலும் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி, ‛‛வயநாடு மக்களும், இந்தியாவில் வசிக்கும் மக்களும் சுதந்திரமான நாட்டில் வாழ்வதற்கு விரும்புகின்றனர். எனக்கு எதிராக எது நடந்தாலும், நான் நானாகவே இருப்பேன். பாஜகவுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டேன். தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். வயநாடு எம்பியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மக்களுக்காக பணியாற்றுவேன்” என்றார்.

திருப்தியில்லை: மேலும், ‛‛எம்பி பதவியை பாஜக பறித்தாலும், சிறையில் அடைத்தாலும் வயநாடு மக்களுக்காக உழைப்பேன்.பதவி, வீட்டை பறித்தாலும், பாஜகவை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன். என் வீட்டை எடுத்துக்கொண்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். அந்த வீட்டில் எனக்கு திருப்தி இல்லை. நாட்டில் எத்தனையோ பேர் வீடு இல்லாமல் இருக்கின்றனர். அவர்களில் நானும் ஒருவன்” என்றார்.
நடந்து சென்ற ராகுல்: முன்னதாக ராகுல் காந்தி வயநாட்டில் கல்பேட்டா பகுதியில் இருந்து பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு ஊர்வலமாக வந்தார். தொண்டர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியில் ராகுல் கலந்துகொண்டார். வழிநெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் உற்சாக வெள்ளத்தில் ராகுல் காந்தி மிதந்து வந்தார். மேலும் மக்களோடு மக்களாக ராகுல் காந்தி நடந்தும் வந்தார்.
சாதாரண லாரியில்: இந்த பேரணியின்போது ராகுல் காந்தி பேரணி, பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் அடிப்படை வசதிகளுடன் கூடிய பிரத்யேக வாகனம், அல்லது திறந்த ஜீப் என எதையும் பயன்படுத்தவில்லை. அவர் சதாரண லாரியின் மீது ஏறி நிர்வாகிகள் சகோதரியுடன் சேர்ந்து நின்று திரண்டு இருந்த மக்களை பார்த்து கையசைத்தார். அந்த லாரியின் முன்புறத்தில் சத்தியமேவ ஜெயதே என எழுதப்பட்டு இருந்தது. இந்த பேரணியின்போது ராகுல் காந்தியை காண கட்சியினர் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் குவிந்திருந்தனர். இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் தற்போதுது இணையதளங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.