ஆருத்ரா வழக்கு; ஹரீஷிடம் விசாரித்ததில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்கள் – பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்!

சென்னை, அமைந்தகரை மேத்தா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் `ஆருத்ரா கோல்டு டிரேடிங்’ என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. தங்களிடம் `ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் ரூ.36,000 வரை வட்டியாக வழங்கப்படும்’ என்று இந்த நிறுவனம், கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தது. இதை நம்பிய பலர் ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதற்கிடையே, இந்தத் திட்டத்தின் மூலம் மக்களிடம் ஆசையைத் தூண்டி, அந்த நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதம் 20-ம் தேதி தமிழக காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் 21 பேர்மீது வழக்கு பதிவுசெய்தனர்.

ஆருத்ரா கோல்டு நிறுவனம்

விசாரணையில், அந்த நிறுவனம் 1,09,255 பேரிடம், மொத்தம் ரூ.2,438 கோடி முதலீடு பெற்றுமோசடி செய்தது தெரியவந்தது. இதுவரை மோசடியில் ஈடுபட்ட 16 பேரில் பாஸ்கர், மோகன் பாபு, செந்தில் குமார், பட்டாபிராம், மைக்கேல்ராஜ், ஹரீஷ் பேச்சிமுத்துராஜ் என்ற ரபீக், ஐயப்பன், ரூசோ, நாகராஜ், மாலதி ஆகிய 11 பேரை போலீஸார் கைதுசெய்து நீதிமன்றக் காவலில் வைத்திருக்கின்றனர்.

இதனிடையே, ஆருத்ரா நிறுவனர் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகர், நிர்வாகிகள் முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த உஷா, பூந்தமல்லியைச் சேர்ந்த தீபக், கோவிந்த் பிரசாத், நாராயணி, செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ருமேஷ்குமார் ஆகிய 5 பேரை தலைமறைவுக் குற்றவாளிகளாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் அறிவித்திருக்கின்றனர். மேலும், இவர்கள் குறித்து தகவல் இருப்பின் பொதுமக்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸுக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. தக்க தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும், தகவல் கொடுப்போரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்திருந்தனர்.

ஆருத்ரா நிறுவனம்

தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் இயக்குநரும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியுமான ஹரீஷை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த மார்ச் 23-ம் தேதி கைதுசெய்து, நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஆருத்ரா நிறுவன மோசடியில் கைதான ஹரீஷ், தனக்கு பொறுப்பு வாங்க பா.ஜ.க நிர்வாகிகளுக்குப் பணம் கொடுத்தது அம்பலமாகியிருக்கிறது. ஹரீஷ் பா.ஜ.க-வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தார்.

அந்தப் பொறுப்பை பெறுவதற்கு பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலருக்கு மோசடி பணத்திலிருந்து பங்கு கொடுத்தது தெரியவந்தது. இதன் காரணமாக, பணம் பெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் அலெக்ஸ், டாக்டர் சுதாகர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. அலெக்ஸ் பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாகவும், சுதாகர் ராணிப்பேட்டை பா.ஜ.க நிர்வாகியாகவும் இருக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட காஞ்சிபுரம் ஹரீஷை 11 நாள்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தியதில், இந்தத் தகவல் தெரியவந்திருக்கிறது.

ஆருத்ரா – ஹரீஷ்

மேலும், விசாரணையில் ஆருத்ரா நிறுவனத்துக்காக காஞ்சிபுரம் பகுதியைச சேர்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து 84 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததும், இந்த 84 கோடியை வசூலித்து தந்ததற்காக ஹரீஷுக்கு ஆருத்ரா நிறுவனத்தின் தரப்பிலிருந்து ரூபாய் 130 கோடி தரப்பட்டதும் தெரியவந்திருக்கிறது. மேலும், ஹரீஷ் தன் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் 15 கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. சில நிறுவனங்களில் முதலீடுகள் செய்திருப்பதும், ‘ஒன் மேன் குரூப்ஸ்’ என்ற பெயரில் தொழில் தொடங்கியதும் தெரியவந்திருக்கிறது. ஹரீஷ் பயன்படுத்திய செல்போன், கார் மற்றும் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.