வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ரஷ்யாவுக்கு எதிரான போரில் எவ்வளவு காலம் ஆனாலும், உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்- ரஷ்யா இடையே, கடந்த ஆண்டு பிப்.,24ல் போர் துவங்கியது. கடந்த ஓராண்டாக நடந்து வரும் இப்போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன், உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவை தொலை பேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ஆதரவு அளிப்போம்:
இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஐரோப்பிய பகுதிகளில் அமைதியும், பாதுகாப்பும் நிலவ உக்ரைனின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் எவ்வளவு காலம் ஆனாலும், உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம்.

இனி வரும் காலங்களில் உக்ரைனின் அதிரடி தாக்குதல் நடவடிக்கைக்கு தயாராவது பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது உக்ரைனின் பாதுகாப்பு சார்ந்த உதவிக்கான, கூட்டணி நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் உறுதிமொழி உள்ளிட்டவை பற்றியும் விவாதிக்கப்பட்டன’. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அறிக்கை: ‘ அமெரிக்காவின் ஆதரவை பிளிங்கன் மீண்டும் உறுதிப்படுத்தினார். உக்ரைனின் நம்பிக்கைக்கு உரிய கூட்டாளராக அமெரிக்கா நீடிக்கிறது. வெற்றியை நோக்கிய பயணத்தில், அமைதியை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறோம்’ எனக் கூறப்பட்டுள்ளது.
Advertisement