ராமநாதபுரம் பா.ஜ.க தலைவராக இருந்த கதிரவன், பணம் வாங்கிக்கொண்டு நிர்வாகிகளை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் உட்பட அனைவரையும் ஒட்டுமொத்தமாக கலைத்த மாநிலத் தலைவர் அண்ணாமலை, ராமநாதபுரத்துக்கு புதிய மாவட்டத் தலைவராக தரணி முருகேசனை உடனடியாக நியமித்தார். புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என அறிக்கையும் வெளியிட்டார். இதனால் கதிரவனும், அவரின் ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியடைந்தனர்.
இந்த நிலையில், புதிய மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட தரணி முருகேசன் தலைமையில், முதல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

கூட்டம் முடிந்து மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் மேடையைவிட்டு கீழே இறங்கி வந்தபோது, முன்னாள் மாவட்டத் தலைவர் கதிரவனின் ஆதரவாளரான பாலா என்கிற சேட்டை பாலா உள்ளிட்ட சிலர் திடீரென மண்டபத்துக்குள் நுழைந்து… மாவட்டத் தலைவர் தரணி முருகேசன்மீது நாற்காலியைத் தூக்கி வீசித் தாக்கினர்.
பதிலுக்கு எதிர் தரப்பினரும் அவர்கள்மீது நாற்காலிகளைத் தூக்கி வீசினர். மாறி மாறி ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திக் கொண்டதால் கூட்டத்தில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.

இதையடுத்து, போலீஸார் பாலா என்கிற சேட்டை பாலாவை மண்டபத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். பின்னர் மாவட்டத் தலைவர், மாநில பொதுச்செயலாளர் இருவரையும் நிர்வாகிகள் பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பினர்.
அப்போது சாலையில் மறித்து நின்று கொண்டு காரில் சென்ற மாவட்டத் தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்களை தரக்குறைவாகப் பேசிய பாலாவை, கேணிக்கரை போலீஸார் காரில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மாநில பொதுச்செயலாளர் கலந்துகொண்ட நிர்வாகிகள் கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவர்மீது, முன்னாள் மாவட்டத் தலைவர் தரப்பு நாற்காலியை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பா.ஜ.க நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.