வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஒரு பாலின திருமணத்திற்கு, உச்சநீதிமன்றத்தில் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, புதிய சமூக உறவு முறை குறித்து பார்லிமென்ட் மட்டுமே முடிவு செய்ய முடியும் எனக் கூறியுள்ளது.
ஒரு பாலினத் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. ஒரு பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசு தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சட்ட அங்கீகாரம் கோரும் வழக்குகளை விசாரணைக்கு ஏற்பதை எதிர்த்தும் அவற்றை நிராகரிக்கக் கோரியும், இந்த புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா வாதாடுகயைில், நீதிமன்ற அறையில் உள்ளவர்கள், நாட்டு மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை. இந்த வழக்கை விசாரிக்கலாமா என்பதை நீதிமன்றம் மீண்டும் ஆராய வேண்டும்.
புதிய சமூக உறவுமுறையை உருவாக்குவது குறித்து முடிவு செய்ய பார்லிமென்ட்டிற்கு தான் அரசியல் சாசனம் அதிகாரம் கொடுத்து உள்ளது. இதனை நீதிமன்றம் முடிவு செய்ய முடியுமா என்பதை தான் நாங்கள் கேட்கிறோம் என்றார்.
இதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், முடிவு எப்படி எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றத்திற்கு சொல்லித்தர வேண்டாம். வாதங்கள், தனிநபர் திருமண சட்டங்கள் மற்றும் சிறப்பு திருமண சட்டங்கள் குறித்து தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான முகுல் ரோத்தஹி, முந்தைய தீர்ப்புகள் மற்றும் ஓரின சேர்க்கையை குற்றச்செயல்களில் இருந்து நீக்கியது அடிப்படையில் ஒரு பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும். அரசியல்சாசனத்தின் சட்டப்பிரிவு 32 ன் அடிப்படையில் தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.
அனைவரும் சமம் அனைவருக்கும் சமமான வாழ்வுரிமை இருக்கிறது. அதுவும் மாண்பும், மரியாதையும் கூடிய வாழ்க்கையை வாழும் சுதந்திரம் இருக்கிறது என்ற அடிப்படை உரிமைகளின் அடிப்படையிலேயே நீதிமன்றத்தை நாடி உள்ளோம். இவ்வாறு அவர் வாதிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement