சென்னை: நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரகணம் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடிய அரிய கிரகணம். இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி ஏப்ரல் 20ம் தேதி அதிகாலை 3.34 மணி முதல் 6.32 வரை ஏற்படுகிறது. இந்தியாவில் நேரடியாக காண முடியாவிட்டாலும் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டில் சந்திரன் வருவதால், சூரியனின் ஒளி பூமிக்கு தெரியாமல் மறைக்கப்படும் நிகழ்வு தான் சூரிய கிரகணமாகும்.
வளைய சூரிய கிரகணமாக தோன்றும் இந்த கிரகணம் முழு வளைய கிரகணம் தோன்றுவதற்கு முன், சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்கப்பட்டு முழு சூரிய கிரகணமாக தோன்றி பின்னர் வளைய கிரகணமாகத் தோன்றுவதால் நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரணம் என அழைக்கப்படுகிறது.
அரிதான இந்த சூரிய கிரகணம், ஆஸ்திரேலியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இந்த கிரகணம் நன்றாக தெரியும். தென்கிழக்கு ஆசியா, இந்தியப் பெருங்கடல் பகுதி, அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் குறைந்தபட்சமாவது பகுதி கிரகணமாவது பார்க்க முடியும். ஆஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள நாடுகளில் முழு சூரிய கிரகணம் பார்க்க முடியும்.
ஆஸ்திரேலியாவின் வட மேற்கு எக்ஷ்மவுத் கல்ஃப் எனும் நிங்கலூ பகுதி. இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகப் பெயரிடப்பட்டுள்ள கடற்பரப்பைச் சுற்றியுள்ள பகுதிகளை நிங்கலூ பகுதி என குறிப்பிடப்படுகிறது.
இந்த பகுதியில் ஏப்ரல் 20ல் நிகழும் சூரிய கிரகணம் தெளிவாக தெரியும் என்பதால் இந்த கிரகணத்திற்கு நிங்கலூ சூரிய கிரகணம் என்று பெயர் வந்துள்ளது.
ஆஸ்திரேலியா நேரப்படி காலை 7.04 மணி முதல் மதியம் 12.29 வரை ஏற்பட உள்ளது. காலை 9.46 மணிக்கு சூரிய கிரகணத்தின் உச்ச நிலையாக முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.
நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரகணத்தின் குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. இந்த கிரகணம் தெரியக்கூடிய இடத்தில் இல்லாதவர்கள், வானிலை ஆராய்ச்சி மையம் ஒளிபரப்பு செய்யக்கூடிய நேரலையில் பார்த்து ரசிக்கலாம்.

சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எதுவாக இருந்தாலும் அப்போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் கர்ப்பிணிகளை பாதித்துவிடக் கூடாது என்றே அந்த நேரங்களில் வெளியே நடமாடக் கூடாது என்று சொல்கிறார்கள். அதிகாலையில் சூரிய கிரகணம் நிகழ்வதால் இந்தியாவில் அநேகமாக கர்ப்பிணிகள் யாரும் வெளியே வர மாட்டார்கள் இருந்தாலும் இது ஒரு எச்சரிக்கை பதிவுதான்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கர்ப்பிணி பெண்கள் கிரகண நேரத்தில் வெளியே நடமாட வேண்டாம் வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் கிரகணம் தொடங்குவதற்கு முன்பே சாப்பிட்டு முடித்து விட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். துளசியை போட்டு வைக்க வேண்டும் இதன் மூலம் உணவில் தோஷம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.