திருப்பூர்: காங்கேயம் அருகே இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிறப்புறுப்பு அறுபட்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வேலம்பாளையம் படையப்பா நகரை சேர்ந்தவர் அருண்பாண்டி (30). கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வரும் இவருக்கும் இதே பகுதியில் பனியன் கம்பெணியில் வேலை பார்த்து வந்த மணி எனும் மாற்றுத்திறனாளி தொழிலாளிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு அருண்பாண்டி பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார். இப்படியாக மணியின் மனைவியிடமும் அருண்பாண்டிக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்பு குறித்து மணி தொடக்கத்தில் எதையும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அருண்பாண்டி வீட்டிற்கு வருவதும், மணியுடன் சேர்ந்து குடிப்பது என இருவரும் சகஜமாக பழகியுள்ளனர். இப்படி இருக்கையில்தான் மணியின் மனைவியுடனான நட்பு மேலும் தீவிரமடைந்து காதலாக சென்றிருக்கிறது. மணியின் மனைவியும், அருண்பாண்டியும் அடிக்கடி போனில் பேசிக்கொள்ள தொடங்கியுள்ளனர். சில சமயத்தில் மணி வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து அருண்பாண்டி, மணியின் மனைவியை சந்திக்க வந்து சென்றிருக்கிறார். பின்னாட்களில் இவர்களின் சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது. இது தொடர்பாக விஷயங்கள் மணியின் காதுகளுக்கு எட்டியுள்ளது. இதன் பின்னர் அருண்பாண்டி மீது மணி சந்தேகம் கொள்ள தொடங்கியுள்ளார்.
ஒருநாள் மணி வீட்டில் இருக்கும்போதே அவருடைய மனைவியின் பெயரை உரிமையாக கூப்பிட்டவாறு அருண்பாண்டி வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். பின்னர் மணியை பார்த்தவுடன் எதையோ சொல்லி சமாளித்துள்ளார். ஆனாலும் அதன் பின்னரும் அடிக்கடி மணியின் வீட்டிற்கு வந்திருக்கிறார். இது குறித்து மணி தனது நண்பர் அருண்பாண்டிக்கு சீரியஸாக வார்னிங் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து கொஞ்ச நாட்கள் அருண்பாண்டியின் நடமாட்டம் குறைந்திருக்கிறது. ஆனால் ஒரிரு வாரங்களுக்கு பின்னர் இதேபோன்று மணி வீட்டில் இல்லாத நேரத்தில் அருண்பாண்டி வீட்டிற்கு வந்திருக்கிறார். எனவே இந்த விஷயத்தில் கடுப்பான மணி இதற்கு ஒரு தீர்வு கட்டுவது என்று யோசித்திருக்கிறார்.
ஆனால் யாரிடம் போய் இதனை சொல்வது என்று தெரியாமல் விழித்த அவர் தன்னுடைய மற்றொரு நண்பர் ஹரிகிருஷ்ணனிடம் அழுது தீர்த்திருக்கிறார். இதனையடுத்து மணிக்கு உதவுவதாக ஹரிகிருஷ்ணன் வாக்கு கொடுக்க, இருவரும் சேர்ந்துக்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி இரவு ஒரு பேக்கரி முன்பு வைத்து அருண்பாண்டியை விசாரித்துள்ளனர். ஆனால் அருண்பாண்டி நக்கலாக பேசிய நிலையில் மணியும் அவரது நண்பர் ஹரிகிருஷ்ணனும் சேர்ந்துக்கொண்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அருண்பாண்டி குடி போதையில் இருந்ததால் அவரால் இதனை எதிர்த்து சண்டையிட முடியவில்லை.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருண் பாண்டியின் பிறப்புறுப்பை அறுத்துள்ளார். இதனால் ரத்தம் பீறிட்டு அடித்துள்ளது. இதனை பார்த்து பயந்த மணியும் அவரது நண்பர் ஹரிகிருஷ்ணன் என இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் அருண்பாண்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஊதியூர் போலீசார் மாற்றுத்திறனாளி மணியை கைது செய்தனர். இதனையடுத்து இவருக்கு உதவி செய்த ஹரிகிருஷ்ணனை தேடி வந்தனர். கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.