கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளையும் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய உள்ளது. 24ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைகள் நடந்து அன்றய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 4 இடங்கள் கேட்டு அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் பாஜக சீட் இல்லை என கூறியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த ஈபிஎஸ்,பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் முரளியை எதிர்த்து அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 10.5.2023 அன்று நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், புலிகேசி நகர் (159) சட்டமன்றத் தொகுதியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டி.அன்பரசன் கர்நாடக மாநிலக் கழக அவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே கர்நாடக மாநிலம் கோலார் தொகுதியில் அதிமுக மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.